விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் மூலம் பாதுகாப்பு பணி

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியாரை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்ட ஒப்பந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விரைவு போக்குவரத்துக் கழக தலைமையகம் மற்றும் பேருந்து நிலையங்களில் பணிபுரிய நன்கு பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் தேவைப்படுகின்றனர். இவ்வாறு பாதுகாவலர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனம், சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருக்கும் துணை மேலாளரிடம் (உபகரணம்) வரும் செப் 12ம் தேதி வரை விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்.13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், 20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஊழியர்களை பணியமர்த்த வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு சீருடை, மெட்டல் டிடெக்டர், லத்தி, விசில் போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும். ஒப்பந்த கால அளவு ஓராண்டாகும். இதைத் தொடர்ந்து சிறப்பாக பணி செய்திருக்கும் சூழலில் 3 மாதம் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு 5 பாதுகாவலர்கள் உள்பட 95 பாதுகாவர்கள், பல்வேறு பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பணியமர்த்தப்படுவர். ஒப்பந்தம் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் செப்.13ம் தேதி பரிசீலனை செய்து, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: