×

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம் விடைபெறுகிறார் செரீனா

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை என்ற தனது கொள்கையில் உறுதியாக இருப்பதால், இந்த தொடரில் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் மெத்வதேவ் (ரஷ்யா), ரபேல் நடால், கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), கேஸ்பர் ரூட் (நார்வே), பெலிக்ஸ் ஆகர் (கனடா), கேமரான் நோரி (இங்கிலாந்து), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) ஆகியோரிடையே பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது. மும்மூர்த்திகளில் ரோஜர் பெடரர், ஜோகோவிச் இல்லாத நிலையில், இளம் வீரர்களின் சவாலை சமாளித்து 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வாரா நடால் என்பதே டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு, இகா ஸ்வியாடெக் (போலந்து), அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா), மரியா சாக்கரி (கிரீஸ்), பவுலா படோசா (ஸ்பெயின்), ஆன்ஸ் ஜெபர் (துனீசியா), அரினா சபலென்கா (பெலாரஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்) ஆகியோர் கோப்பையை கைப்பற்ற வரிந்துகட்டுகின்றனர். அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (40 வயது) இந்த தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ள செரீனா, இந்த தொடரின் இரட்டையர் பிரிவில் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து களமிறங்க ‘வைல்டு கார்டு’சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ் ஓபன் நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 2.

Tags : Serena ,US Open , Serena bids farewell to the US Open today
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்