புவி, ஹர்திக் பந்துவீச்சில் பாக். திணறல்; ஆசிய கோப்பையில் இந்தியா அசத்தல்

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இப்போட்டி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லியின் 100வது சர்வதேச டி20 ஆக அமைந்தது. டெஸ்ட் (102), ஒருநாள் (262) மற்றும் டி20 (100) என மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர், உலக அளவில் 2வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. முன்னதாக, நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா அறிமுகமானார். முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். பாபர் 10 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் அர்ஷ்தீப் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பகார் ஸமான் 10 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பாக். அணி 5.5 ஓவரில் 42 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரிஸ்வான் - இப்திகார் அகமது ஜோடி 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தது.

இப்திகார் 28 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஸ்வான் 43 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), குஷ்தில் ஷா 2 ரன் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 97 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த ஆசிப் அலி 9, முகமது நவாஸ் 1, ஷதாப் கான் 10, நசீம் ஷா 0, ஷாநவாஸ் டஹானி 16 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹரிஸ் ராவுப் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் (4-0-26-4), ஹர்திக் பாண்டியா 3 (4-0-25-3), அர்ஷ்தீப் சிங் 2, ஆவேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

Related Stories: