வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு; இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களுடன், மாமல்லபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே  தெரிவித்தார்.

வாக்காளர், அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் தினமும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை வாக்காளர்களிடம் பெற்று இணைக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் ஆதார் எண்ணை இணைத்து கொண்டனர். எனினும், சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதியில் நேற்று மாலை நடந்தது.

இதில், இந்திய தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே கலந்து கொண்டு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தெரிவித்தார். இனி, ‘வரும் நாட்களில் வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’என இந்திய தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே தெரிவித்தர். இக்கூட்டத்தில், தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஷாஜீவனா, வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: