×

சென்னை மாநகராட்சி பகுதியில் உலகத்தரத்தில் 28 மைதானங்கள்; அதிகாரிகள் திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த 28 மைதானங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், பல்வேறு விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டு, பராமரித்து வருகிறது. விளையாட்டுகள் இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக உருவாக்கவும், நல்வழிப்படுத்தவும், உடல் மற்றும் உள்ளம் வலிமை பெறவும் உதவுகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பல விளையாட்டு திடலில் மாலை 6 அல்லது 7 மணிக்கு மேல் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. வசதியுள்ளவர்கள் தனியார் விளையாட்டு மைதாங்களுக்கு சென்று கட்டணம் செலுத்தி விளையாடுவார்கள். ஆனால், ஏழை எளிய மக்கள் மாநகராட்சி விளையாட்டு திடல்களையே பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் தற்போது  210 விளையாட்டு திடல்கள், 96 உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும், 4 இறகு பந்து உள்விளையாட்டரங்கம், 1 கூடைப்பந்து உள்விளையாட்டரங்கம், 2 நீச்சல் குளங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 210 விளையாட்டு திடல்களில் 14க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்களில் கால்பந்து, டென்னிஸ், கைபந்து, பூ பந்து , கூடை பந்து போன்ற மைதானங்கள் அமைக்கப்பட்டு நட்சத்திர விளையாட்டு திடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 22 உடற்பயிற்சி கூடங்களில் மல்டி ஜிம், டிரெட்மில் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு, உடற்பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினசரி 50 முதல் 100 வரையிலான நபர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் மந்தவெளி, ஆர்.ஆர் காலனி, ஜாபர்கான்பேட்டை, மயிலாப்பூர், கற்பகம் அவென்யூ மற்றும் ஷெனாய் நகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. கூடைபந்து உள்விளையாட்டு அரங்கம் கீழ்ப்பாக்கம் கார்டனில் அமைந்துள்ளது.

ஸ்கேட்டிங் ரிங்க் அண்ணா நகர், ஷெனாய் நகர், நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கே.கே.நகர் மற்றும் தி.நகரில் உள்ளன. நீச்சல் குளம் மெரினா கடற்கரை மற்றும் மை லேடிஸ் பூங்காவில் அமைந்துள்ளன. இந்நிலையில், சென்னையில் உலகத்தரத்தில் புதிதாக 28 விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்து, அதற்காக ரூ.29.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 மைதானங்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும் என்றும், இந்த விளையாட்டு மைதானங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடிமக்களும் பயன்பெறும் வகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய காலனிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்த விளையாட்டு மைதானங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக வடசென்னையில் புளியந்தோப்பில் உள்ள கே.பி.பார்க் குடியிருப்புக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘இந்த விளையாட்டு மைதானங்களின் தோற்றமானது உலகத் தரத்தில் இருக்கும். குறிப்பாக  மைதானங்களை சுற்றி சுவர்கள், அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள்  மற்றும் கால்பந்து, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் போன்ற வெளிப்புற விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் புல்வெளிகளை கொண்டிருக்கும். இது மட்டுமல்லாமல் இந்த மைதானங்களுக்குள் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, யுனிசெக்ஸ் கழிப்பறைகள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க இடம், மைதானங்களை சுற்றி மரம் என மைதாங்களின் தோற்றம் வியக்க வைக்கும். இதன் மூலம் இளைஞர்கள் விளையாட்டு துறையில் அடுத்தகட்ட இடத்திற்கு செல்வார்கள்,’’என்றனர்.


Tags : 28 ,World Class Stadiums ,Chennai Corporation , 28 world class stadiums in Chennai Corporation area; Officers Scheme
× RELATED ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்