ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். இங்குள்ள விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இங்குள்ள நெற்பயிர்கள் அனைத்தும் விளைந்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டது. இன்னும் சில நாட்கள் தண்ணீரில் மிதந்ததால அனைத்தும் அழுகிவிடும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர். எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு நெற்பயிர்கள் அழுகிய விவசாயிகளுக்கு சென்று இழப்பீடு வழங்கவேண்டும் என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘பேரண்டூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு ₹ 25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலவு செய்து கடந்த 4 மாதங்களாக நெற்பயிர் சாகுபடி செய்துள்ளோம்.
அறுவடை செய்ய ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திடீரென பெய்த மழையால் பயிர்களில் மழைநீர் சூழ்ந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் பயிர்கள் தண்ணீரில் கிடந்ததால் அழுகியும் முளைத்தும் விடும். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.