30 பேர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை; சென்னை விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்னை: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.  பல்கலைக்கழக துணைவேந்தர் ராம்பாபு கொடாலி வரவேற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 48 ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட 2040 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 30 மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலை  வேந்தர் விஜய்குமார் சரஸ்வத் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது. தமிழக அரசு தரமான உயர்கல்வி வழங்குவதே இதற்கு காரணம். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளன. கல்வி மட்டுமே நமது சமூகப்பார்வையை மாற்றும்.

இதன் மூலமாகத்தான் நாட்டில் நிலவும் சமத்துவமின்மை என்ற குறைபாடு அகலும். ஒன்றிய அரசாங்கம் உயர்கல்விக்கு ஒதுக்கும் நிதியை இன்னும் அதிகரிக்க வேண்டும்’’ என்றார். மாணவர்களுக்கு பட்டமளித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் குமார் சரஸ்வத் பேசியதாவது:  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் நவீன இந்தியா உருவாக்குவதில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே முதன்மை பங்காற்றும் எனக்  கூறியதை நினைவில் கொண்டு பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் நம் தேசத்தின்  வளர்ச்சியில் பங்காற்ற வேண்டும். இந்திய அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளை  மேம்படுத்தியதன் விளைவாக பெரும்பாலான தர வரிசை பட்டியலில் வி.ஐ.டி பல்கலைக்கழகம் முன்னிலை  வகிக்கிறது. உலகம் நம் வளர்ச்சியை எதிர்நோக்கும்  இத்தருணத்தில் பட்டதாரிகளாகிய உங்களின் பங்கு சுற்றுச்சூழல் அமைப்பு,  4ம் தொழில்துறை புரட்சி போன்றவற்றிற்கு ஏதுவாகத் திகழ வேண்டும் என்றார்.  

ஸ்விட்ச் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு பேசுகையில், ‘‘பட்டம் பெறும் மாணவர்கள் பொருளாதார வளர்ச்சியில் விஸ்வரூப வேகத்தில் பயணிக்கும் நம் இந்திய நாட்டிற்கு வினையூக்கிகளாகத் திகழ வேண்டும், இன்றைய இளைஞர்கள் தற்போதைய சூழலில் ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஆசையுடனும், வேட்கையுடனும், புதுமை முயற்சிடனும் செயலாற்ற வேண்டும்’’ என்றார். பட்டமளிப்பு விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜீ.வி.செல்வம் மற்றும் உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தியா பெண்டாரெட்டி, பல்கலைக்கழக இணை துணை வேந்தர் வீ.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் முனைவர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர்  பீ.கே.மனோகரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: