×

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு மீண்டும் சலுகை: வாழ்நாள் முழுவதும் வேலைக்காரர், டிரைவர்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு மீண்டும் ஓய்வு கால சலுகையை மாற்றி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஓய்வு கால சலுகைகளை ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதி திருத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஓய்வுகால சலுகைகளை ஒன்றிய அரசு மீண்டும் திருத்தி நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தது. இதில் தலைமை நீதிபதிகளுக்கு மட்டுமின்ற ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பல சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வு நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக் காவலருடன், அவரது வீட்டிற்கும் 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படும். இந்த சலுகை மற்ற நீதிபதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.  ஓய்வுக்குப் பின் தலைமை நீதிபதிக்கு 6 மாதத்திற்கு டெல்லியில் வாடகை இல்லாத டைப்-8 ரக குடியிருப்புகள் வழங்கப்படும். இவை முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த எம்பி.க்களுக்கு வழங்கப்படுபவை. ஓய்வு பெற்ற நீதிபதிகள் தனது வீட்டிற்கு ஒரு பணியாளர், டிரைவர், உதவியாளரை வாழ்நாள் முழுக்க நியமித்துக் கொள்ளலாம். வீட்டுக்கு இலவச தொலைப்பேசி, தொலைப்பேசி கட்டணம், செல்போன், பிராண்ட்பேண்ட், டேட்டா கார்டு ஆகியவை மாதத்துக்கு ரூ.4,200க்கு மிகாமல் பயன்படுத்தலாம். அனைத்து செலவுகளையும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Chief Justice ,High Court ,Government of the Union , Retired Chief Justice, Union Govt., Privilege,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...