×

ஆப்கானிஸ்தானிடம் இலங்கை திணறல்

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுடன் நேற்று மோதிய இலங்கை அணி 105 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. பஸல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவரில் குசால் மெண்டிஸ் (2 ரன்), சரித் அசலங்கா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பதும் நிசங்கா 3 ரன் எடுத்து நவீன் உல் ஹக் பந்துவீச்சில் வெளியேற 2 ஓவரில் 5 ரன்னுக்கு 3 விக்கெட் என இலங்கை மேலும் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், குணதிலகா - பானுகா ராஜபக்ச ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 44 ரன் சேர்த்தது. குணதிலகா 17 ரன் எடுக்க, அடுத்து வந்த வனிந்து ஹசரங்கா (2 ரன்), கேப்டன் தசுன் ஷனகா (0) ஏமாற்றமளித்தனர். அதிரடியாக விளையாடிய பானுகா 38 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானது இலங்கைக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. மஹீஷ் தீக்‌ஷனா (0), மதீஷா பதிரணா (5) சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இலங்கை 75 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கடைசி விக்கெட்டுக்கு சமிகா கருணரத்னே - தில்ஷன் மதுஷங்கா ஜோடி 30 ரன் சேர்த்தது.

பொறுப்புடன் விளையாடிய கருணரத்னே 31 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பரூக்கி வேகத்தில் கிளீன் போல்டாக, இலங்கை அணி 19.4 ஓவரில் 105 ரன்னுக்கு சுருண்டது. மதுஷங்கா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பரூக்கி 3.4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். முஜீப் உர் ரகுமான், முகமது நபி தலா 2, நவீன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.



Tags : Sri Lanka ,Afghanistan , Sri Lanka stumbling to Afghanistan
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...