
டோக்கியோ: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. அரையிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையுடன் மோதிய சாத்விக் - சிராக் ஜோடி முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த 2 செட்களையும் 21-18, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றிய மலேசிய இணை பைனலுக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 17 நிமிடங்களுக்கு நீடித்தது. இப்போட்டியில் தோற்றாலும், அரையிறுதி வரை முன்னேறியதால் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலமாக, உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமை சாத்விக் - சிராக் இணைக்கு கிடைத்துள்ளது.