×

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு: நாளை விசாரணை

சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று பேசியதற்காக கைதான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்கிரோஷமாக பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

புகாரின்படி, கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன்ஜாமீன்  மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ம் தேதி தள்ளுபடி செய்தது.  புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணன் ஆகஸ்ட் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றமும், செஷன்ஸ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. துரதிஷ்டவசமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு திங்கட்கிழமை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags : Periyar ,Kanal Kannan , Controversy over Periyar statue Stunt master Kanal Kannan pleads for bail in High Court: Hearing tomorrow
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு