காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில் ‘மேட் இன் சீனா’ வாசகம்: பேரவை தலைவர் அப்பாவு வருத்தம்

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் இருந்த வருத்தத்தை தருகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கனடாவில் 65வது காமன்வெல்த் மக்களவை மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சென்றிருந்தனர். மாநாடு நடக்கும் பகுதிக்கு செல்லும்போது அந்தந்த நாட்டு சபாநாயகர்கள் தங்களின் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். ஓம்பிர்லா, அப்பாவு ஆகியோர் கையில் ஏந்தி சென்ற இந்திய தேசியக் கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் இருந்தது.

இதுகுறித்து அப்பாவு கூறுகையில், ‘‘இந்திய தேசிய கொடியில், இது சீனா தயாரிப்பு என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றிருந்தது. இது அனைவருக்குமே மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்திய தேசிய கொடியை சீனாவில் தயாரித்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் உள்ள அச்சகங்களில் இன்று இரவு கூறினால், மறுநாள் காலையில் கொடிகளை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிலை ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை’’ என்றார்.

Related Stories: