×

17 வயது முடிந்தவர்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்தால் 18வது பிறந்தநாள் பரிசாக வீடு தேடி வாக்காளர் அட்டை வரும்: இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்தால் 18வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என  இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது மேடையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேசியதாவது: “கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் இப்போட்டிகள் நடந்தது. அதனால் நாங்கள் இணைய வழி மூலம் போட்டி நடத்தினோம். நினைத்ததை விட மக்கள் ஆர்வமாக போட்டியில் கலந்துகொண்டனர். 18 பிரிவுகளில் இந்த போட்டி நடந்தது. அதில் சில போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே பேசியதாவது: ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்தடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும். சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும். 18வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். 17 வயது பூர்த்தி ஆனவர்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு இளைஞரின் வாக்கைக்கூட தவறவிட விரும்பவில்லை.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : India , 17-year-olds will get voter card as 18th birthday gift if they book in advance: Election Commissioner of India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...