×

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வழக்கு: விசிக புகாரில் நடவடிக்கை

சேலம்: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் காவேரிபுரத்தில் கடந்த வாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் சுவர் விளம்பரம் வரைந்தனர். அதனை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த 2 பேர் தகராறு செய்தனர். தகராறு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 நாட்களுக்கு முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி கொளத்தூர் கருங்கல்லூரில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், பல்வேறு கருத்துக்களை பேசியுள்ளார்.

அதில், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும், தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடனும் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேசியிருப்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் விசிக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் புகார் கொடுத்தார். இதனிடையே மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது கொளத்தூர் போலீசிலும் மாவட்ட செயலாளர் வசந்த் புகார் அளித்தார். எஸ்ஐ அன்பழகன் விசாரணை நடத்தி, பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். அதாவது, இருபிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல் (153 ஏ (1), பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசுதல் (505 (2) ஆகிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Mettur Bamaka ,MLA ,Visika , Case against Mettur Bamaka MLA for speaking inciting riots: Action on Visika's complaint
× RELATED விசிக பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி