அகமதாபாத்: ‘சுதந்திர போராட்டத்தில் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்த காதி, தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் உத்வேகமாக அமையும்’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார். குஜராத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அகமதாபாத்தில் அவர் சபர்மதி ஆற்றங்கரையில், 75வது சுதந்திர ஆண்டை ஒட்டி நடந்த காதி திருவிழாவில் பங்கேற்றார். இதில், 7,500 பெண்கள் ஒன்றாக ராட்டை சுற்றி புதிய சாதனை படைத்தனர். இதில் பிரதமர் மோடியும், ராட்டையில் நூல் சுற்றினார்.
பின்னர் விழாவில் அவர் பேசுகையில், ‘காதியின் ஒரு நூல்தான் சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகமாக இருந்து, அடிமைச் சங்கிலியை தகர்த்தெறிந்த வரலாறு படைத்தது. சுதந்திர போராட்டத்தின் போது, காதியை நாட்டின் சுயமரியாதைச் சின்னமாக மகாத்மா காந்தி மாற்றினார். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு அதே காதி தரக்குறைவான பொருளாக கருதப்பட்டது. இதன் காரணமாக, காதி மற்றும் காதியுடன் தொடர்புடைய கிராமத் தொழில்கள் அழிக்கப்பட்டன. அது, நம் நெசவாளர்களை பாதித்தது. தற்போது, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் உறுதிமொழியை நிறைவேற்றவும், தற்சார்பு இந்தியா கனவை எட்டவும் உத்வேகமாக காதி அமைந்துள்ளது,’ என்றார்.