×

செப். 10ல் பிஇ பொதுப்பிரிவு கவுன்சலிங்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தின் இன்ஜினியரிங் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அளித்த பேட்டி: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. 4 கட்டமாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கல்லூரி கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அரசுக் கல்லூரிகளுக்கு எந்த அளவிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கலந்து ஆலோசித்து கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்து 30ம் தேதி மாலையே அறிவிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்பட்ட பாட திட்டத்தில் தமிழ் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த பல்கலைக்கழகத்திலும் பொறியியல் படிப்பில் தமிழ் பாடம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்களை படிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். மாற்றி அமைக்கப்பட்ட பாட திட்டங்கள் 2 வது செமஸ்டரில் இருந்து நடைமுறை படுத்தப்படும் என்றார்.
இந்த சந்திப்பின் போது உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

4 கட்டங்களாக நடைபெறும்
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு
முதல் கட்ட கலந்தாய்வு    செப்.10-12ம் தேதி வரை
2ம் கட்ட கலந்தாய்வு    செப்.25-27ம் தேதி வரை
3ம் கட்ட கலந்தாய்வு    அக்.13-15ம் தேதி வரை
4ம் கட்ட கலந்தாய்வு     அக்.29-31ம் தேதி வரை
துணை கலந்தாய்வு    நவ.15-17ம் தேதி வரை
ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பிரிவிற்கான கலந்தாய்வு - நவம்பர் 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை

Tags : PE ,Minister ,Ponmudi , Sep. 10th PE General Category Counselling: Minister Ponmudi Announcement
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...