ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான 608 பக்க அறிக்கை முதல்வரிடம் தாக்கல்: நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்; நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை முடித்து, தனது 608 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அளித்தார். நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, செப்டம்பர் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுடன் சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வந்த தோழி சசிகலா, அவரை அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். அங்கு, ஜெயலலிதா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அப்போதைய அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அமைச்சரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர் உடல்நிலை தேறி வருவதாக மட்டும் அப்போலோ சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று அடிக்கடி கூறி வந்தார். இதை அதிமுக தொண்டர்கள் அப்படியே நம்பி வந்தனர். ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்றது போன்ற எந்த புகைப்படமும் வெளிவரவில்லை.

75 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இதனால், அதிமுக தொண்டர்கள் கொதிப்படைந்தனர். அப்போது ஆளுங்கட்சியாக இருந்து முதல்வராகவும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு என்ன நோய் என்று கூட தெரியாமல், மர்மமான முறையில் இறந்துவிட்டதாக அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 2017 செப்டம்பர் 25ம் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 2017 செப்டம்பர் மாதமே தனது விசாரணையை துவக்கியது. சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாவலர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே விசாரணை ஆணையத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவ வல்லுநர் குழு முன்னிலையில்தான் மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை கூறியது. இதை ஆணையம் ஏற்கவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 2 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி மீண்டும் விசாரணை துவங்கியது. மருத்துவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி விசாரணை ஆணையத்தின் விசாரணை நிறைவுக்கு வந்தது.

ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை காலத்தில் மொத்தம் 149 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையே ஆணையத்தின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி முடியாததால் ஆணையம் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசும் ஒவ்வொரு 3 மாதமும் கூடுதல் அவகாசம் வழங்கி வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விசாரணை ஆணையத்துக்கு 13 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக கடந்த 24ம் தேதி ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தான் ஆணையம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தயாரானது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், விசாரணையின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக அரசால் கடந்த 2017 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உடனிருந்தனர்.  

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று காலமானார். இதுகுறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 25.9.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் கால வரம்பு  கடந்த 24ம் தேதி முடிவுற்ற நிலையில், இன்று (நேற்று) காலை முதல்வர்  மு.க.ஸ்டாலினை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி  தலைமை செயலகத்தில் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார். இந்த அறிக்கையை 29ம் தேதி (நாளை) நடைபெற இருக்கிற தமிழக அமைச்சரவை  கூட்டத்தில் ஒரு பொருளாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* 5 ஆண்டுகளுக்கு பின்...

ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அவரது மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆனையம் சுமார் 608 பக்க அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. இதன் மூலம், ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகள் 5 ஆண்டுகளுக்கு பிறகாவது வெளிவருமா, அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Stories: