×

தேன்கனிக்கோட்டை அருகே பாறையில் ஏறியபோது வழுக்கி விழுந்து பெண் யானை சாவு: வனத்துறையினர் விசாரணை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்ைட அருகே வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனைக்கு பின், யானையின் உடலை அடக்கம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காலிகட்டு வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், காலிகட்டு வனப்பகுதிக்கு உட்பட்ட ஜி.மடுகு என்ற இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, பாறை மீது நடந்து சென்ற போது, தவறி அருகிலுள்ள பள்ளத்திற்குள் விழுந்தது. இதில் அந்த யானையின் தலை மற்றும் வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசனுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமையில், ஏ.சி.எப் ராஜமாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையினர், சம்பந்தப்பட்ட ஜி.மடுகு பகுதிக்கு உடனடியாக சென்று பார்த்தனர். உருக்குலைந்த நிலையில் இரு பாறைகளுக்கு இடையே, யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வனத்துறையின் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் வந்த மருத்துவ குழுவினர், உயிரிழந்த யானையின் உடலை, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதே இடத்தில் குழிதோண்டி புதைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெல்லட்டி வனப்பகுதியில் குட்டியை ஈன முடியாமல், தாய் யானை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்த சம்பவம், வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dhenkanikottai, slipped while climbing the roof Female elephant died after falling, forest department investigating
× RELATED பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு