×

திருத்தங்கல்லில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊருணியில் அமைகிறது பொழுதுபோக்கு பூங்கா: ரூ.61 லட்சத்தில் விரைவில் பணிகள் தொடக்கம்

சிவகாசி: திருத்தங்கல்லில் உள்ள செல்லியாரம்மன் ஊருணியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.61 லட்சத்தில் நடைப்பயிற்சி மேடையுடன், சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப் போகிறது. இதனால் கழிவுநீர் ஊருணி கண்கவர் இடமாக மாறப்போகிறது. சிவகாசி மாநகராட்சியில் உள்ள திருத்தங்கல் மண்டலத்தில், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்க வேண்டும் என திமுக நகர பொறுப்பாளர் எஸ்.ஏ உதயசூரியன் தலைமையில், திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, திருத்தங்கல் மண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தங்கல் வடக்குரத வீதியில் உள்ள செல்லியாரம்மன் ஊருணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஊருணியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளன. கழிவுநீர் தேங்கியிருப்பதால் ஊருணி துர்நாற்றம் வீசியது. ‘குடிமகன்கள்’ ஊருணியில் மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை நடைபாதையில் உடைத்து போடுகின்றனர்.மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஊருணிக்குள் ஓட்டல், கறிக்கடை, கோழிக்கடை கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

வடக்கு ரதவீதியில் சாலையோரம் தடுப்புச்சுவர் இன்றி இருப்பதால் வாகனங்கள் ஊருணிக்குள் கவிழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால், ஊருணி பயனில்லாமல் போனது. கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கழிவுநீர் ஓடையாக மாறி இருந்தது. இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊருணியை தூர்வாரி, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:
2வது வார்டு முருகன் கூறுகையில், ‘இந்த ஊருணி தூர்வாரப்பட்டால், போர்வெல்களில் நிலத்தடி நீர் உயர்ந்து 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், இந்த பகுதியே சுத்தமாகி பெரும் பொழுது போக்கு பூங்காவாக அழகு பெறும். பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக பணிகள் தொடங்கப்படாத நிலை உள்ளதாக கூறுகின்றனர். ஊருணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பணிகளை தொடங்க மாநகராட்சி நிர்வாகம் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

நிலத்தடி நீர் மட்டம் உயரும்:
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திருத்தங்கல் மண்டலத்தில் வசிக்கும் மக்களுக்கு பொழுது போக்கிற்கு இடம் இல்லை என்ற மனநிலையை, இந்த ஊரணியில் அமையப் போகும் சிறுவர் பூங்கா நிறைவு செய்யும். ஊருணியை தூர்வாரி ஆழப்படுத்தி ஊருணியின் பக்கவாட்டில் கல் பதித்து, நடைமேடை அமைத்து, அதில் பேவர் பிளாக் பதிக்கப்படுகிறது. சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டும், பாதுகாவலர் அறை அமைத்தும், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுகின்றது. ஊருணி தூர்வாரும் பட்சத்தில் நிலத்தடி நீர் உயரும். விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளன’ என்றார்.

Tags : Oruni ,Thirutangalll , Thiruthangal, Artist Urban Development Project, Recreation Park
× RELATED நகை செய்து தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி