×

விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகளை திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் வழியே ஊர்வலமாக எடுத்து செல்ல தடை; போலீசார் உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் திரும்ப பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு வழக்கத்தை விட விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்ச்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள் இந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் இந்து முன்னணி சென்னை மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
கூட்டத்தில், எற்கனவே வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும். புதிதாக வேறு எந்த இடங்களிலும் சிலைகள் அமைக்கவோ, வழிபாடு நடத்தவோ கூடாது. குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்.
குறிப்பாக, விநாயகர் சிலைகளை திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் எந்தவித ஆசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டதாக உயர் போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக இந்து பரிவார் தலைவர் வசந்தகுமார் ஜி என்பவர் நிருபர்களிடம் கூறியதாவது:‘வழக்கமாக வைக்கப்படும் இடங்களில் தான் சிலைகள் நிறுவ வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தால், எங்கு சிலை வைப்பது. எனவே இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். அதே போன்று மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.25 ஆயிரம் வரை ‘டெபாசிட்’தொகை செலுத்தி மீட்டர் பெறுகிறோம். விழா முடிந்த பின்னர் அந்த மீட்டரை கொடுத்து ‘டெபாசிட்’தொகையை பெறுவதில் நடைமுறை சிக்கல் அதிகம் இருக்கிறது. எனவே இந்த பணத்தை திரும்ப தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vinayagar Chaturthi ,Tiruvallikeni ,Iceaus , Prohibition on procession of idols placed on Vinayagar Chaturthi through Tiruvallikeni, Isaus; Police orders
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...