×

ரூ.930 கோடி மோசடி வழக்கு பாசி நிறுவன நிர்வாகிகள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை

கோவை: கோவையில் 930 கோடி ரூபாய் பாசி நிறுவன மோசடி வழக்கில் அதன் நிர்வாகிகள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தர உத்தரவிடப்பட்டது.  திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2009ம் ஆண்டில் பாசி போரஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வசித்து வந்த மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார்கள். கோவை, திருப்பூர் வட்டாரத்தில் அதிக நபர்களிடம் பெரும் தொகை சுருட்டப்பட்டது. இந்த மோசடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையில் 58,571 பேரிடம் 930 கோடியே 71 லட்ச ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் (43), அவருடைய தந்தை கதிரவன் (70) மற்றும் பங்குதாரர் கமலவள்ளி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது.

2013ம் ஆண்டு இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்தது. அரசு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம், இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து நேற்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட பிரிவு 5 ன்படி 10 ஆண்டு, பரிசு சீட்டு மற்றும் பண சுழற்சி தடை சட்டத்தின் 10 ஆண்டு, மோசடி, கூட்டு சதி போன்றவற்றிக்கு 7 ஆண்டு என சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 2 பேருக்கும் 171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் சாட்சி அளித்த முதலீட்டாளர்கள் 1402 பேருக்கு இந்த தொகையை முறையாக பிரித்து வழங்கவேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இதர முதலீட்டாளர்கள் புகார் அளித்தால் அது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். அவர்களுக்கும் உரிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன் இறந்துவிட்டார். இதனால் இவர் மீதான தண்டனை எதுவும் அறிவிக்கப்படவில்லை.  

நீதிபதி ரவி தனது தீர்ப்பில், ‘‘இத்தனை ஆண்டு காலம் வாடிக்கையாளர்கள் கொடுத்த பணத்தை திருப்பி தர நீங்கள் முன் வரவில்லை. கால அவகாசம் வழங்கியும் நீங்கள் பணம் தரவில்லை. 58,571 பேரிடம் நீங்கள் பணம் வசூலித்திருக்கிறீர்கள். 1,402 பேர் இந்த வழக்கில் சாட்சி அளித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை இந்த வழக்கில் சேர்க்க சிபிஐ போலீசார் முயற்சி எடுக்கவில்லை. இதற்காக இந்த கோர்ட் சிபிஐக்கு கண்டனம் தெரிவிக்கிறது’’ என கூறியிருந்தார்.


Tags : Fraud case, Moss company executives, 2 people jailed for 27 years
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி