×

திருப்போரூர் போலீஸ் குடியிருப்பை முறையாக பராமரிக்க வேண்டும்; குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூரில், உள்ள போலீஸ் குடியிருப்பை முறையாக பராமரிக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் கடந்த 2014ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 20 காவலர்களுக்கான வீடுகள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மட்டுமே குடியிருக்கின்றனர். திருப்போரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இங்கு வசிக்காமல் தனியாக வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.  உயர் அதிகாரிகள் இல்லாததால் போலீஸ் குடியிருப்பு முழுவதும் கவனிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதன் காரணமாக வளாகம் முழுவதும் பல்வேறு புதர்ச்செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், வளாகத்தில் நுழைவாயிலில் மதிற்சுவர் இல்லாததால், மாடுகள், பன்றிகள் நுழைந்து வளாகத்தை தங்களது ஓய்விடமாக மாற்றி வருகின்றன.

மேலும், வளாகத்தில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மோட்டார் பல நேரங்களில் பழுதடைந்து விடுவதால் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குழாய் நீருக்காக போலீஸ் குடும்பத்தினர் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், வளாகத்தில் குப்பைத்தொட்டி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. காவல்துறை நிர்வாகம் இந்த பராமரிப்பு சீர்கேடுகளை களைந்து வளாகம் முழுவதும் பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும், மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்து போலீசாரின் உடல் வலிவை பேணும் வகையில் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Tiruporur , Tiruporur police residence should be properly maintained; Residents insist
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ