×

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் காவல் உதவி மையம் திறப்பு; ஆவடி கமிஷனர் பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூர் - வண்டலூர் வௌிவட்ட சாலையில் காவல் உதவி மையத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் பணியில் இருப்பார்கள். இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு ரிப்பன்வெட்டி காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் போக்குவரத்து காவலர்களுக்கு பிரதிபலிப்பு சட்டைகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, `மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்டச்சாலை 40 கி.மீ. ஆவடி மாநகர காவல் எல்லையில் வருகிறது. துறை முகத்தில் இருந்து அதிகளவு கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் விபத்துக்கள் அதிகளவு நடக்கிறது. இதை குறைக்கும் வகையில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று முதலுதவி அளித்தல், போக்குவரத்தை சீர்படுத்துதல், மீட்புப்பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தி போக்குவரத்து சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்துகளை குறைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விபத்து நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் மின்விளக்குகள் அமைப்பது, ஒளிர்விப்பான்களை பொருத்துதல், தானியங்கி சிக்னல் அமைத்தல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை அடையும்’
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Police Assistance Center ,Meenjoor - Vandalur Outer Ring Road ,Avadi , Inauguration of Police Assistance Center on Meenjoor - Vandalur Outer Ring Road; Avadi Commissioner Participation
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!