×

சட்டவிரோத செயலி மூலம் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; திருவள்ளூர் வாலிபர் சுற்றிவளைப்பு குற்றப்புலனாய்வு போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர்: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் சிக்னல் செயலியில் பேசியதாக திருவள்ளூர்  பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் ராஜா முகமது(26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட காக்களூர் சாலையில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி காக்களூர் பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜா முகமது சவூதியில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ராஜா முகமதுவை அவரது வீட்டில் வைத்து சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை மணவாளநகர் காவல் நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ., ஐ.பி உள்ளிட்ட உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ராஜா முகமது சவூதியில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் சட்டவிரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூக வலைதளத்தில் தேச விரோதிகளுடன் பேசியது தெரியவந்தது. மேலும் அதில் பேசிய நபர் தன்னை சவூதிக்கு வருவதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இஸ்லாமிய இனத்தை மேம்படுத்த நீ வரவேண்டும் எனவும் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் ராஜா முகமது அவரது முகநூல் பக்கத்தில் இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி பேசுவதாகவும் மற்ற மதத்தினரை தாழ்த்தி பேசும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் கூறி பல்வேறு வழக்குகள் பதிவு செய்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ராஜா முகமதுவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜா முகமதுவை போலீசார் சிறையில் அடைத்தனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபரிடம் திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் சிக்னல் என்ற செயலில் பேசி தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiruvallur , Contact with terrorist organizations through illegal app; Tiruvallur youth encirclement crime investigation police action
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...