×

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் இடிந்து விழும் அபாய நிலையில் குடிநீர் மேல்நிலை; நீர்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை

பெரியபாளையம்: வெங்கல் பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பழுதடைந்து தூண்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வெங்கல்லிருந்து சீதாஞ்சேரி செல்லும் சாலையில் அம்பேத்கர் மன்றம் அருகே சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் சுமார் 1 லட்சம் கொள்ளளவு தண்ணீர் சேமிக்கப்பட்டு, அம்பேத்கர் நகர், அண்ணா தெரு, கம்பர் தெரு, காந்தி தெரு, பஜா தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் 6 தூண்களும் விரிசல் ஏற்பட்டு பலவீனமடைந்துள்ளது. மேலும் அதன் கம்பிகள்  எலும்பு கூடுகலாக வெளியே தெரிகிறது. அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.  இந்த தொட்டியானது சரிந்து கீழே விழுந்தால் அப்பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே, இந்த பழைய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை தேக்க தொட்டியை கட்டி தர வேண்டுமென மாவட்டம் மற்றும் எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகத்துக்கும் இதுகுறித்து புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இனியாவது எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் காலம் கருதி புதிய குடிநீர் மேல்நிலை  நீர் தேக்க தொட்டியை கட்டி தர வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vengal ,Periyapalayam , Water level is in danger of collapsing in Vengal area near Periyapalayam; Demand for demolition of water tank
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...