×

வேப்பம்பட்டு பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்வே மேம்பால பணி மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: பூந்தமல்லி மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து பெருமாள்பட்டு வழியாக வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர், ஆவடிக்கு செல்லும் வழியாக வேப்பம்பட்டு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் வேப்பம்பட்டு வழியாக வந்து செல்கின்றன. இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்கள் செல்லும் போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்லும் போதோ, அல்லது கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும் போது இந்த ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டது. இதனால் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2010ல் ரூ.29.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரயில் நிலைய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், அதன்பின் கடந்த 2011ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.60 கோடி மதிப்பில் 27 துாண்களுடன் புதிய மேம்பால பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணி கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் மேம்பால பணிகளுக்கு 4 எல்லைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 4வது எல்லை தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிகள் துவங்க ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாலம் இறங்கும் பகுதியை மாற்றிட வேண்டுமென புகார் அளித்ததன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012ம் தேதி வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது.

இதனால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மற்றொரு ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், டன்லப் நகர் பகுதியில் வசிக்கும் ஏழுமலை, ராஜ்குமார், குணசேகர் மற்றும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் வல்லுநர் குழு நிராகரித்த பகுதியில் மேம்பால பணிகள் துவங்குவதாக புகார் அளித்ததின் பேரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறாததால் செடிகள் மரங்களாகி நிற்கின்றன. அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.  எனவே நீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் பணிகளை தொடர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vepampatu , People's demand to resume railway flyover work which was stopped halfway in Vepampatu area
× RELATED வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில்...