ராகுலை குற்றம்சாட்டி சோனியாவுக்கு 5 பக்க கடிதம் காங்.கில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்: காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க முடிவு

புதுடெல்லி: காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதம் அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள், கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் நேற்று காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியாவுக்கு 5 பக்க கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராகுல் அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக 2013ல் அவர் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சியில் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் நடைமுறையை முற்றிலும் சீரழித்தார். அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு, முகஸ்துதி செய்யும் அனுபவமற்ற கும்பல் கட்சி விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. அவசரச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கிழித்தது அவரது அனுபவமின்மைக்கு சான்றாக அமைந்தது. அவரது இந்த குழந்தைத் தனமான செயல் இந்திய அரசின் மாண்மைக் குலைத்தது. ஐமு கூட்டணி ஆட்சியின் உறுதியை சீரழித்த ரிமோட் கன்ட்ரோல் மாடல், தற்போது காங்கிரஸ் கட்சியில் செயல்படுத்தப்படுகிறது. ராகுல் காந்தியாலும், அவரது பாதுகாவலர்களாலும், அவரது உதவியாளர்களாலும் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு நீங்கள் ஒரு ரிமோட் கன்ட்ரோலாக இருக்கிறீர்கள்.

 கட்சியின் அவல நிலை குறித்து கவலைப்பட்டு உங்களுக்கு கடிதம் எழுதிய கட்சியின் 23 தலைவர்கள் அவமதிக்கப்பட்டோம். கட்சித் தேர்தல் மொத்தமும் கேலிக்கூத்தாகி விட்டது. எனவே, கனத்த இதயத்தோடு காங்கிரஸ் கட்சியுடனான 50 ஆண்டு பந்தத்தை முடித்து, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு கூறி அவர் உள்ளார். கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆசாத் ராஜினாமாவைத் தொடர்ந்து, காஷ்மீரில் 3 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 8 மூத்த காங்கிரஸ் தலைவர் நேற்று கட்சியிலிருந்து விலகினர்.

ஆசாத் டிஎன்ஏ மோடி மயம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘ஆசாத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது. அவரது குற்றச்சாட்டுகள் உண்மையானது அல்ல. கட்சிக்கு அவர் துரோகம் செய்துள்ளார். ஆசாத்தின் டிஎன்ஏ மோடி மயமாகி விட்டது. இருவருக்கும் இடையேயான அன்பை நாடாளுமன்றத்தில் பார்த்தோம். இப்போது, இந்த கடிதத்திலும் வெளிப்பட்டுள்ளது,’ என்றார்.

ஆசாத்துக்காக அழுத மோடி

கடந்தாண்டு மாநிலங்களவை எம்பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற குலாம் நபி ஆசாத்துக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, ஆசாத் தனது உண்மையான நண்பர் என்றும், ‘உங்களை ஓய்வு பெற விடமாட்டேன்’ என்று கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார். அதைத் தொடர்ந்து, ஆசாத்துக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

* காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் குரல் கொடுத்து கடிதம் எழுதிய ஜி23  என அழைக்கப்படும் காங். மூத்த தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர்.

* ஜி23 தலைவர்களில் சமீபத்தில் கபில் சிபல், ஜிதின் பிரசாதா, யோகனந்தா சாஸ்திரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர். தற்போது, 4 தலைவராக ஆசாத் விலகியுள்ளார்.

Related Stories: