ஆரணி பேரூராட்சியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்; துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு

பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல், இருந்து வரும் பிரச்னைகள் குறித்து உடனடியாக பட்டியல் அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, பொன்னேரி தொகுதியில் உள்ள ஆரணி பேரூராட்சியில், தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, நீண்ட காலமாக பேருந்துகள் சாலையிலும், பஜாரிலும் நின்று இயக்கப்படுவதால் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.

ஆரணியில் 24 மணி நேரமும் மருத்துவருடன் கூடிய மருத்துவமனை இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் பிரசனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து  கேட்டுக் கொண்டனர். ஆரணி பேரூராட்சியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளபோதும், பேருந்து நிலையம், 24 மணி நேர மருத்துவமனை, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்கள் கருத்துக்களை கேட்ட எம்எல்ஏ துரை.சந்திரசேகர் முதல்வரே நேரடியாக அனைத்து தொகுதி பிரச்னைகளை கேட்டுள்ளதால் விரைவில் திட்டங்கள் நிறைவேறும் என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமாரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: