×

எஸ்.பி.வேலுமணி மீது பதிவான ஊழல் வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதியிடம்தான் முறையிட முடியும்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது. புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கை குழு அறிக்கையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : SB ,Velumani ,ICourt , Corruption cases filed against SB Velumani can be appealed only to a single judge: State's argument in ICourt
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...