×

மேட்டூர் அணைக்கு 50,000 கனஅடி நீர் வரத்து: வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அந்த அணைகள் நிரம்பி இருப்பதால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், இருமாநில எல்லையில் மழை பெய்து வருவதாலும், காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 23,000 கனஅடி தண்ணீர், நீர்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.

உபரிநீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47டிஎம்சியாகவும் உள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 8 நாட்களுக்கு பிறகு உபரிநீர் போக்கியில் வெள்ளநீர் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால்  12 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Mettur dam , 50,000 cubic feet water inflow to Mettur dam: flood warning
× RELATED மேட்டூர் அணை கட்டும்போது கூலி வேலைக்கு சென்ற 126 வயது மூதாட்டி மரணம்