உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி (பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனம்) திட்டத்தின்  மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் , சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் , முதலாம் மண்டல பாசனத்திற்கு, தண்ணீர் வழங்கப்பட்டு, கடந்த மே மாதம் 15ம் தேதி நிறைவு பெற்றது.

தென்மேற்கு பருவ மழையால் திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில், கடந்த 17-ம்தேதி முதல் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் இயக்கப்பட்டு, காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, பிஏபி., இரண்டாம் மண்டல பாசனத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில்,  பாசன காலத்தில் ஒரு சுற்றுக்கு, 1900 மில்லியன் கன அடி வீதம் 4 சுற்றுக்களுக்கு 7600 மில்லியன் கன அடி நீர் 120 நாட்களில், குறிப்பிட்ட இடைவெளியில் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் (ஆக.26) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் வினீத் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு நிகழ்வில், அமைச்சர்கள் சாமிநாதன் , கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க விவசாயிகள் கலந்து கொண்டனர். 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் காலை நிலவரப்படி, நீர்மட்டம்  48.14 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 897 கன அடியாகவும் உள்ளது.

Related Stories: