×

வாணியம்பாடியில் இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ரயில்கள் நிறுத்தம்: பெரும் விபத்து தவிர்ப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் இன்று காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டபோது கண்டறிந்தனர்.

உடனடியாக ரயில்நிலைய அதிகாரி சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.  இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள்டக்கர் உள்ளிட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனிடையே விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் மாற்றுப்பாதை வழியாக (டிராக் 1) ரயில்கள் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சாிசெய்யப்பட்டது. இருப்பினும் சுமார் ஒரு மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதித்தது. இதனால் ரயிலில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின.


Tags : Vainiyambadi , Cracked tracks stop trains at Vaniyambadi this morning: major accident avoided
× RELATED வாணியம்பாடி அருகே விடிய விடிய கனமழை...