கொரோனாவை தொடர்ந்து பரவுது டெங்கு!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா பீதி கடந்த எட்டு மாதங்களாக மக்களை வாட்டி வதக்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சலும் பரவ ஆரம்பித்து இருப்பதாக தெரிவிக்கிறார் குழந்தை நல மருத்துவர் டாக்டர் முஹமது கிஸார். ‘‘டெங்கு கொசுவால் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய். சாதாரண காய்ச்சல் மட்டுமே இருந்தாலும், உடனடியாகவும் முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிரை பாதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, உடல் சோர்வு, மூட்டு வலி, கண் பின்புறம் வலி மற்றும் சருமத்தில் தடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு ரத்த கசிவு ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலும் காய்ச்சல், சரும தடிப்பு, தலைவலி இவை மூன்றும் டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  கடுமையான மூட்டு மற்றும் தசை வலி இருப்பதால், ‘எலும்பு ஒடியும் நோய்’ (BREAKBONE) என்றும் அழைக்கப்படுகிறது. டெங்கு ரத்த கசிதல் நோய் (Dengue Hemorrhagic Fever) மிக தீவிர தன்மை கொண்டது. சருமம், மூக்கு, ஈறு பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும். சிலர் ரத்த வாந்தியும் எடுக்கலாம். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த வகை டெங்கு ஜுரம்.

 

பரவக் காரணம்?

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்ற பகலில் கடிக்கும் கொசு மூலம் இது பரவும். இந்த கொசு வீட்டினுள் பதுங்கி இருக்கும். மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூஜாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. நேரிடையாக நோயாளியிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. நோயாளியை தொடுவதாலும், அருகில் இருப்பதாலும் பரவாது.

அறிகுறிகள்

கொசு கடித்து, நோய்க்கான அறிகுறி தெரிய 5 முதல் 15 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி ஏற்படும். காய்ச்சல் 104 டிகிரி வரை போகலாம். நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புள்ளது. கண்கள் சிவந்து போகலாம். உடலில் தோலில் சிகப்பு நிறமாக மாறும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறி கட்டலாம். இந்த ஜுரத்தை பொருத்தவரை நான்கு நாட்களில் ஜுரம் குறைந்து அதிகமாக வியர்க்கும். இந்த காலகட்டத்தில், ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். பலர் நோயிலிருந்து மீண்டுவிட்டோம் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த நேரத்தில் தான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். காரணம் மீண்டும் ஜுரம், சரும தடிப்பு மற்றும் உள்ளங்கை மற்றும் கால் பாதங்களும் சிவந்து தடித்து போகும்.

 

எப்படி கண்டுபிடிப்பது?

டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, நோயின் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்க வாய்ப்பு அதிகம். உடனே டாக்டரை அணுகி கலந்து ஆலோசிக்க வேண்டும்.

சிகிச்சை முறை

இதற்கான மருந்து மாத்திரை எல்லாம் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண ஜுர மாத்திரை, போதிய ஓய்வு, நிறைய நீராகாரம் தான் இதற்கான சிகிச்சை. மருத்துவர் அறிவுரை இல்லாமல், சுய மருத்துவம் செய்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. டெங்கு ரத்தம் கசிதல் ஜுரம் (Dengue Hemorrhagic Fever) இந்த வகையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, ரத்த கசிவு, மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும். தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி இருக்கும்.

இருமல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஏற்படலாம். இரண்டு முதல் ஆறு நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீளமாதல் போன்ற மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். தோலில் ரத்த கசிவு, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம் கசிந்து கருப்பு மலம், பல் ஈரலில் ரத்த கசிவு, மூக்கில் ரத்தம் போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம்.

இருதயம் பாதிக்கலாம். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். பிளேட்லெட்டின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தால் Platelet Transfusion செய்யலாம். இதில் Dengue Shock Syndrome பாதிப்பு ஏற்பட்டால் பிளாஸ்மா சிகிச்ைச மேற்கொள்ள வேண்டும்.

தடுக்கும் முறை

*வைரஸ், நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவுவதை தடுக்க வேண்டும்.

*டெங்கு வைரஸை பரப்பும், ஏடெஸ் கொசுவின் இனவிருத்தியை எல்லா நிலையிலும் தடுக்கவேண்டும்.

*வீட்டில் உள்ள பாத்திரங்கள், பழைய சாமான்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வீட்டில் செடிகள் வளர்த்தால், தொட்டி மற்றும் அதன் கீழ் வைக்கப்பட்டு இருக்கும் தட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*ஏ.சி மற்றும் ஃபிரிட்ஜ் டிரேயில் உள்ள தண்ணீரை தேங்கி வைக்கக்கூடாது.

*பூஜாடியில் உள்ள தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு மாற்ற வேண்டும். பூஜாடியின் உள்புறத்தை, நன்றாக தேய்த்து கழுவி மறுபடியும் அதில்

பூக்களை வைக்கலாம்.

*வீட்டில்  மற்றும் தோட்டத்தில் நீர் வடியும் பாதைகளை குப்பைகள் அண்டாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  

   

*வீட்டில் கழிவறைகளை இப்போது வெஸ்டர்ன் டாய்லெட் என்பதால், அதை சுத்தம் செய்து, அதனை எப்போதும் மூடியே வைக்க வேண்டும்.

*குடத்தில் பிடித்து பயன்படுத்தப்படும் தண்ணீரை மூடியே வைக்க வேண்டும். மேலும் அதனை இரண்டு நாட்களுக்குள் செலவழித்து விட வேண்டும். இந்த கொசுவின் வாழ்க்கை சுழற்சி ஏழு நாள் என்பதால் சுத்தமாக தேங்கும் நீரை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

*கொசு கடிக்காமல் இருக்க கை கால்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம்.

*உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகப்படுத்தலாம். ஆனால் தோல் அலர்ஜி உண்டு பண்ணலாம்.

*இந்த கொசு பகல் நேரத்தில் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் தான் அதிகம் கடிக்கும்.

*அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்.

*நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வாவை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

*கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதை ஒழிக்க முடியும்.

தொகுப்பு: ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>