×

திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அரசாக உள்ளது; என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அரசாக உள்ளது; என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து  உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

மாண்புமிகு வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்  திரு. சு. முத்துசாமி அவர்களே!

நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களே!

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்களே!

மாநிலங்களவை உறுப்பினர் திரு. அந்தியூர் செல்வராஜ் அவர்களே!

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய அன்பிற்கினிய திரு. கணேசமூர்த்தி அவர்களே!

கொங்குநாடு தேசிய மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும்  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. ஈஸ்வரன் அவர்களே!

சட்டமன்ற உறுப்பினர்கள்

 திரு. வெங்கடாசலம் அவர்களே!
 திரு. திருமகன் ஈவெரா அவர்களே!

முன்னாள் அமைச்சர் திரு. தோப்பு வெங்கடாசலம் அவர்களே!

அன்பிற்குரிய திரு. நல்லசிவம் அவர்களே!

ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் அவர்களே!

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எச். கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப., அவர்களே!

மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சந்தோஷினி சந்திரா அவர்களே!


கூடுதல் ஆட்சியர் திரு. மதுபாலன், இ.ஆ.ப., அவர்களே!  

முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே!


உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கக்கூடிய பிரதிநிதிகளே!

அரசு உயர் அலுவலர்களே!

அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக வருகை தந்திருக்கக்கூடிய பயனாளிகளே!

குறிப்பாக என் பாசத்திற்குரிய மகளிர் சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள தாய்மார்களே! சகோதரிகளே!

அன்பிற்கினிய பெரியோர்களே! நண்பர்களே!

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

மூன்று நாள் பயணமாக, மேற்கு மண்டலத்திற்கு வந்துள்ள நான் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். ஈரோடு என்பது, தமிழர்களாகிய நமது உயிரோடு கலந்திருக்கக்கூடிய ஊர். இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நேற்றைய நாள் கள்ளிப்பட்டியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தேன்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், தற்போது இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன். பெருந்துறை என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர்! பெருந்துறை அருகே, திங்களூரில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழ்ச்சங்கம் இருந்ததாக ஒரு செப்பேடு சொல்கிறது. சேரனைச் சோழன் வென்ற இடம், இந்த பெருந்துறை. சிறை வைக்கப்பட்ட சேரனை மீட்கப் புலவர் பாடியதுதான் களவழி நாற்பது என்ற நற்றமிழ் நூல்! யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை - கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்தப் பகுதி.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் இந்த அரசு விழா மிகப்பிரமாண்டமாக நம்முடைய மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முத்துசாமி அவர்கள், மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பணியாற்றியவர். நம்முடைய அருமைச் சகோதரர் முத்துசாமி அவர்களைப் போல, அமைதியாகப் பணியாற்ற யாராலும் முடியாது. சிலர் செய்யும் பணி, அதிக பரபரப்பாக இருக்கும், ஆர்ப்பாட்டமாக இருக்கும், “என்னைப் போல பணியாற்ற முடியுமா?” என்று கேட்பதைப் போல இருக்கும்.

ஆனால் சிலர் செய்யும் பணி அமைதியாக, அடக்கமாக, ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கும். அந்த வரிசையில் மிகமுக்கியமானவராக நம்முடைய சகோதரர் முத்துசாமி அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் அவரிடம் இருந்து இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது, இதே ஈரோட்டில், இதே இடத்தில் நடந்த மண்டல மாநாடு. அந்த மாநாட்டை, மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியவர் நம்முடைய மாண்புமிகு முத்துசாமி அவர்கள். அவருடைய சீரிய முயற்சியால், இந்த அரசு விழாவும், அந்த மாநாட்டைத்தான் இப்போது எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவ்வளவு பெரிய கூட்டம், அவ்வளவு பெரிய எழுச்சி. இதற்குக் காரணமாக விளங்கக்கூடிய நம்முடைய அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கும், அதேபோல நம்முடைய மாவட்டத்தினுடைய ஆட்சியருக்கும், அவருக்குத் துணைநின்று பணியாற்றியிருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகள், அரசு அலுவலர்கள்  அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கு செய்து தரப்பட்டுள்ளது.

* பெருந்துறை அரசு மருத்துவமனையில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 20 ஆண்டு கோரிக்கையான, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது.

* ஈரோடு மாநகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

* அந்தியூர், பர்கூர் ஊராட்சி மலைப்பகுதி கிராமங்களில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

* அம்மாப்பேட்டை, வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் இணைப்புச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

* அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

* அதேபோல், அதிமுக ஆட்சியில், கிடப்பில் போடப்பட்ட 1600 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

* பெருந்துறை பகுதிக்கு, 765 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் நாம் செயல்படுத்த இருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த பிரமாண்டமான அரசு விழா இப்போது நடைபெற்று வருகிறது.

* 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 184 கோடி ரூபாய்.

* 135 முடிவுற்ற பணிகளைத் நான் இந்த விழாவில் துவக்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 262 கோடி ரூபாய்.

* 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு, 167 கோடியே 51 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கிறது.

-  ஆக, மூன்றும் இணைந்த, முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரம் - பர்கூர் ஊராட்சியிலுள்ள, மடம், கல்வாரை, பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம் மற்றும் தேவர்மலை பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நபார்டு - கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டங்களின்கீழ் தொலைதூரக் கல்வி (Smart Study Center) மற்றும் தொலைதூர மருத்துவ சேவையினை (Telemedicine) இணையதளம் வழியாக வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* மகளிர் சுய உதவிக்குழு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழிற்குழு உற்பத்தி செய்யும் பொருட்களை  விற்பனை செய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக “ஆற்றல் ஈரோடு“ என்ற பிரத்தியேகச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை இணையதளத்தின் செயல்பாடு இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

* நான் பொள்ளாச்சி போகும்போது, அங்கிருந்த விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அதனைப்பற்றி, நான் வேளாண் துறையில் கேட்டபோது, கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், கோவை, திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரிவித்தார்கள். இங்கு நேற்று வந்தவுடன், மாவட்ட மக்களுடைய கோரிக்கைகளை நான் அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து கேட்டறிந்தேன். அதனையொட்டி, சில அறிவிப்புக்களை நான் வெளியிட விரும்புகிறேன்.

ஈரோடு வெளிவட்டச் சுற்றுச் சாலை, தற்போது நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் தொடங்கி - ஈரோடு மாவட்டம், ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலை வரை 14 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.  இச்சாலையின் தொடர்ச்சியாக, மாநில நெடுஞ்சாலையான ஈரோடு - திங்களூர் சாலையைக் கடந்து, ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் - சத்தி - கோபி - ஈரோடு சாலை வரை நீட்டித்து அமைத்தலுக்கான விரிவான திட்ட அறிக்கை, ரூபாய் 60 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேளாண்மை உற்பத்தியை பெருக்கி - உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது.  தற்போது ஈரோடு மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பாக 16 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றையும் இங்கே அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஈரோட்டில் 2 கோடி ரூபாய் செலவில், குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். நல்லாம்பட்டியிலும் 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். தாளவாடியிலும் 2 கோடியே 82 லட்ச ரூபாய் செலவில், குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். மஞ்சள் உற்பத்தி செய்யும் உழவர்களின் நலனுக்காக, 10 கோடி ரூபாய் செலவில், மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். அதேபோன்று, தாளவாடி மக்களின் கோரிக்கையாக, அரசு ஆரம்பர சுகாதார நிலையத்தில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மேலும், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே கருவியும் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் உங்களுக்கு உறுதி அளிப்பது, ஈரோடு மாவட்டத்தை, எல்லாவற்றிலும் முதன்மை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம் என்பதுதான்.  இங்கு வருவதற்கு முன்னால், அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை நான் பார்வையிட்டேன். அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் என்னோடு வந்தார்கள். அதை பார்வையிட்டு விட்டுத்தான் இந்த மேடைக்கு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அந்த அரசுப் பணிகளை உடனடியாக துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். நிச்சயம், உறுதியாக, விரைவில், இன்னும் சில மாதங்களில் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, நானே நேரடியாக வந்து அதைத் தொடங்கி வைப்பேன் என்ற அந்த உறுதியை இன்றைக்கு உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

நேற்றைக்கு முந்தைய நாள், கோவை மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டேன். அங்கும் இதேபோல் பல்வேறு பணிகளைத் துவக்கி வைத்தேன், அடிக்கல் நாட்டினேன்.  இத்தகைய அரசு விழாக்கள் பொழுதுபோக்குக்காக நடைபெறுகிற விழாக்கள் அல்ல, ஏதோ எங்களைப் புகழக்கூடிய விழாக்கள் அல்ல! மக்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய விழா தான். இதுபோன்ற மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, என்னைப் பாராட்டிப் பேசுவதைவிட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று விரும்புகிறவன் நான். புதிய புகழ்மொழிகள் எனக்குத் தேவையில்லை, இருக்கும் புகழே போதும் என்று நினைக்கக்கூடியவன் நான்.

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உழைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் பாராட்டிச் சொன்னதைவிட எனக்குப் வேறு ஏதேனும் பாராட்டு வேறு இருக்க முடியுமா?  நீ உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய்! என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைவிட வேறு பாராட்டு எனக்கு இருக்கவே முடியாது. இத்தகைய பாராட்டுகளின் மூலமாக அடைந்த உற்சாகத்தால்தான் நான்  உழைத்துக் கொண்டு இருக்கிறேன், இன்னும் உழைப்பேன், என் உயிர் இருக்கிற வரையில் உழைத்துக் கொண்டே இருப்பேன். இது உறுதி. என்னுடைய இலக்கு அதுதான்.

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு.
அனைத்துத் துறை வளர்ச்சி -
அனைத்து மாவட்ட வளர்ச்சி -
அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சி -
அனைத்துச் சமூக வளர்ச்சி -
ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் இலக்கணப்படி ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கிறது. மூன்று நாள் பயணமாக, இந்த மேற்கு மண்டலத்திற்கு நான் புறப்படுவதற்கு முன்பு, இரண்டு வெற்றிச் செய்திகள் எனக்கு வந்து சேர்ந்தன. அது என்னவென்று கேட்டீர்களானால்,

* இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு,  தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்திருக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பெரிய சாதனை. மக்களைக் காக்கக்கூடிய அரசாக மட்டுமல்ல, மண்ணைக் காக்கக்கூடிய அரசாகவும் இது செயல்படுகிறது.  இத்தகைய விளைச்சல் மூலமாக என்ன தெரிகிறது? கழக ஆட்சி அமைந்ததும் எடுக்கப்பட்ட துல்லியமான நடவடிக்கையின் காரணமாக, கடந்த ஆண்டு 1.04 கோடி மெட்ரிக் டன் ஆக நெல் உற்பத்தி உயர்ந்தது. இந்த ஆண்டு, அதையும் விஞ்சி 1.22 கோடி மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது.  அதாவது 18 இலட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்திருக்கிறோம். அதேபோல், நெல் உற்பத்தி பாசனப் பரப்பும் அதிகமாகி இருக்கிறது.

இந்தச் சாதனையானது சாதாரணமாக நடந்து விடவில்லை. தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, வேளாண்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான். 50 விழுக்காடு மானியத்தில் பாரம்பரிய விதை நெல்கள் வழங்கப்பட்டன. நேற்று நான் கோபிச்செட்டிப்பாளையம் சென்றிருந்தபோது, விவசாயிகள் அந்த நெல்மணிகளை கொடுத்து நீங்கள் அறிவித்தத் திட்டத்தால், விளைந்தது என்று சொன்னார்கள். மகிழ்ச்சியோடு, சிரித்துக் கொண்டே சொன்னார்கள். நன்றி, நன்றி, நன்றி என்று சொன்னார்கள். இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கமுடியும்.

அதுமட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  கடைமடை வரைக்கும் தண்ணீர் செல்வதற்கு உரிய வாய்ப்பாக, கால்வாய்கள் முறையாக, தூர்வாரப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்துதான் இத்தகைய மகத்தான சாதனைக்கு அடித்தளம் அமைத்தது. நெல் சாகுபடி அதிகம் ஆவது என்பது தமிழ்நாட்டின் வளத்தைக் காட்டுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை மேலும் வளப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இன்னொரு முக்கியமான வெற்றி செய்தி என்னவென்று கேட்டால், இங்கே கூட திரு.கணேசமூர்த்தி அவர்கள் பேசுகிறபோது, கோட்டிட்டுக் காட்டினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூகநீதி எண்ணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுத்துவிட்டது. ஆலயங்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுபவர்கள் அதற்கான உரிய பயிற்சி பெற்றிருந்தால் போதும் அதுதான் நம்முடைய கருத்து. இதில் சாதி என்பது ஒரு அளவுகோலாக இருக்கக் கூடாது. இத்தகைய சமூகநீதியை காக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் நீதிமன்றம் போனார்கள், வழக்கு தாக்கல் செய்தார்கள். அதற்கு தடைபோட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது, திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தந்தை பெரியாரும், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் இன்றைக்கு இருந்திருந்தால், எப்படி மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆக, இது நமது கொள்கைக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி! வேளாண் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதனாலும் சரி, அனைத்திலும் தொலைநோக்கத்தோடு, நாம் முடிவெடுத்துச் செயல்படுவதன் காரணத்தால்தான் இத்தகைய வெற்றி சாத்தியம் ஆனது. ஆகவே, அனைவரும் பாராட்டக்கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது. அது மட்டுமல்ல, அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவுக்கே வழிகாட்டும் அரசாக இருக்கிறது. மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி இது போன்ற பல்வேறு திட்டங்களை, பல்வேறு மாநிலத்தவரும் பின்பற்றக்கூடிய அளவிற்கு இன்றைக்கு சூழலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே, நமது இடஒதுக்கீடு என்ற சமூகநீதித் தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. மாநில சுயாட்சி என்கிற தத்துவம் என்பதும் திராவிட இயக்கம் கொடுத்த கொடைதான். கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த மகத்தான திட்டங்களின் மூலமாக அடைந்த வளர்ச்சி தான்.

பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வியில் சேரக்கூடியவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம், அதுவும் பெண்கள் தான் அதிகம். இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் எந்த மாநிலம்  என்று கேட்டால் அதுவும் நம்முடைய தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி, மகாராஷ்டிராவை விட அடுத்தது நம்முடைய தமிழ்நாட்டில்தான். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடி மக்களின் முன்னேற்றம் என்பதும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிகம். பெண்களின் சமூகப் சமூகப் பாதுகாப்பும் தமிழ்நாட்டில் தான் அதிகம். பெண் தொழில்முனைவோர் இங்கு தான் அதிகம்.தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். மனித வளக் குறியீடுகள் இங்கு தான் அதிகம். வறுமை குறைவு. சிசு மரணம் குறைவு. பட்டினிச் சாவுகள் இல்லை. இவைதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய வளர்ச்சி.

யாரோ ஒரு சில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி. அனைத்து தொழில்களும், அனைத்து தொழில்முனைவோரும், அனைத்து மாவட்டமும், அனைத்துச் சமூகமும் சேர்ந்து வளர்வதுதான் வளர்ச்சி. இதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் காணவிரும்பிய வளர்ச்சி. அத்தகைய திட்டங்களைத்தான் தினந்தோறும் தீட்டி வருகிறோம். அதற்காகவே, நித்தமும் உழைத்து வருகிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களில் ஒருவனாக இருந்து நான் செயலாற்றி வருகிறேன். ஊருக்கு உழைப்பதை, உங்களுக்கு உழைப்பதை என் வாழ்நாள் கடமையாகக் கருதி உழைத்து வருகிறேன்.

அழுத்தமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். நான் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச்சமுதாயத்தை வளமும், நலமும் பெற்ற சமுதாயமாக - தமிழ்நாட்டை வளமும் நலமும் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக மாற்றிக் காட்டினேன் என்று பெயரெடுப்பதற்காகவே நான் உழைத்து வருகிறேன். கோட்டையில் இருந்தாலும், மக்களின் மனங்களில் வாழ்வதையே பெரும் பேறாகக் கருதக்கூடியவன் நான். எனவே, உங்கள் அனைவரின் ஆதரவோடு, என் இலக்கை நோக்கி நான் நடைபோடுகிறேன்! உங்கள் துணையோடு நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்! வெற்றி பெறுவேன்! வெற்றி பெறுவேன்! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். என்று தெரிவித்தார்.

Tags : India ,Chief Minister ,M.K.Stal , Dravidian Model Government, India, Guide, M.K.Stalin
× RELATED ஊழல் யுனிவர்சிட்டிக்கு வேந்தராக...