சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்கள்: ஆத்திரத்தில் 4 இந்திய பெண்களை தாக்கிய பெண் கைது

டெக்சாஸ்: அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்களாக உள்ளனர் எனக்கூறி 4 இந்திய வம்சாவளி பெண்களை தாக்கிய மெக்சிகன் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் வாகன நிறுத்துமிடத்தில் நான்கு இந்திய வம்சாவளி பெண்களை, மெக்சிகன் வம்சாவளியை சேர்ந்த மற்றொரு பெண் (அமெரிக்காவில் பிறந்தவர்) சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தாக்குதல் நடத்தும் பெண் பேசுகையில், ‘இந்தியர்கள் அமெரிக்காவிற்கு அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். எங்கு சென்றாலும் இந்தியர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் வாழ்வதற்கான வசதிகள் இருந்தால், அவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள். அதனால் அவர்களை வெறுக்கிறேன்’ என்று கூச்சலிட்டு கூறுகிறார். இந்த வீடியோவை வெளியிட்ட நபர், ‘இந்த சம்பவம் டெக்சாஸின் டல்லாஸில் நடந்தது.

 எனது அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்காக சென்றனர். அப்போது அவர்கள் தாக்கப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால், தாக்குதல் நடத்திய மெக்சிகன் பெண் பிளானோவின் எஸ்மரால்டா அப்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் மீது அத்துமீறி தாக்குதல், உடல் காயம் ஏற்படுத்துதல், பயங்கர அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அவரை 10,000 டாலர் பிணைய பத்திரத்தை சமர்ப்பித்தால் விடுவிப்பதாக கூறி போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரீமா ரசூல் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இதுபோன்ற சம்பவம் மிகவும் பயமாக இருக்கிறது. அந்தப் பெண் தனது கையில் துப்பாக்கி வைத்திருந்தார். இந்திய வம்சாவளி பெண்கள், ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களது மொழி உச்சரிப்புகளை கண்டறிந்து அவர்களை சுட்டுத்தள்ள விரும்பினார். மிகவும் வெறுக்கத்தக்க இந்த குற்றத்திற்காக அந்தப் பெண் மீது கடுமையாகன நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: