×

அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

சென்னை: அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதனை சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களை தேர்வு செய்து அயல்நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.

காட்சி ஊடகத்தின் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். அதன்படி மாதந்தோறும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,

* அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.

* திரைப்படத்துக்கு என ஒதுக்கப்பட்ட பாடவேளையில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும்.

* படம் திரையிடுவதற்கு முன்பும், பின்னும் அதுகுறித்து மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.

* எந்த  படங்களை திரையிடுவது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு கல்வித்துறை விவரங்களை அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திரைப்படம் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதித் தர வேண்டியது கட்டாயம்.

* பள்ளியளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.

* வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Tags : Department of School Education , Govt School, Juvenile Film, Guidance, School Education Department
× RELATED 24 முதல் 26ம் தேதி வரை செயல்படும் பள்ளிகளுக்கு 26ம் தேதி கடைசி பணிநாள்