×

தென்மாவட்டத்தில் தொழில் வளத்தை அதிகரிக்க மதுரை-தூத்துக்குடி அகலரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில் பயனாளிகள், பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: தென்மாவட்டத்தில் தொழில்வளத்தை அதிகரிக்க மதுரை-தூத்துக்குடி அகலரயில் பாதை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியும், கூடுதல் நிதி ஒதுக்கியும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் விருதுநகர் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி பெறவும், தூத்துக்குடியிலிருந்து மதுரை வரை பெரிய, சிறிய தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வளத்தை பெருக்கவும்,

மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக தூத்துக்குடிக்கு ஒரு புதிய அகல ரயில் பாதை அமைக்க கடந்த 2011ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக சர்வே முடிக்கப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலமருதூரிலிருந்து, குளத்தூர், விளாத்திக்குளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாரபட்டி, திருப்பரங்குன்றம் வரை புதியரயில் பாதை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தியும், மேற்படி நில ஆர்ஜிதத்திற்கு அதிக நிதி தேவைப்படுவதால், மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கான விரைவில் இத்திட்டம் நிறைவேறினால் கூடுதலாக மீளவிட்டான், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில், ரயில்வே சந்திப்புகள் கிடைக்கும். மேலும், மதுரை-தூத்துக்குடி-அருப்புக்கோட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு, தென்பகுதியில் அமைந்துள்ள முக்கிய 8 தாலுகா மக்கள் பயன்பெறுவர். தமிழ்நாட்டின் தென்பகுதியில் மதுரை, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம், தூத்துக்குடி புதிய ரயில் தடத்தில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் துவங்கி பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த புதிய ரயில் பாதையை விரைவில் முடித்து, ரயில் போக்குவரத்து துவங்க வேண்டும் என ரயில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mathurai-Thoothukudi Agalarai ,South District , Madurai-Tuticorin wide rail line should be completed quickly to increase industry in the southern district: rail users, public demand
× RELATED குழந்தைக்கு தங்க மோதிரம், நல உதவிகள்...