×

விழுப்புரம்- மங்களூர் தேசிய நெடுஞ்சாலை வல்லம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு ரூ35 முதல் ரூ215 வரை கட்டணம் வசூல்: ரத்து செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

வேலூர்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக மங்களூர் தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் கோட்டத்தில் அடங்கிய கணியம்பாடி அடுத்த வல்லம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் ரூ35 முதல் ரூ215 கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதிர்ச்சியடைந்துள்ள வாகன ஓட்டிகள், கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரத்தில் இருந்து வேட்டவலம், திருவண்ணாமலை, வல்லம், பில்லாந்திப்பட்டு, பேரணாம்பட்டு, வி.கோட்டா, கோலார், ஒசகோட்டா வழியாக மங்களூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 234 இருவழிச்சாலையாகவே மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழக எல்லைக்குள் கே.வி.குப்பம் பில்லாந்திப்பட்டு, கீழ்வல்லம், இனாம்காரியந்தல், வேட்டவலம், விழுப்புரம் என 5 சுங்கச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 234 பராமரிப்புப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறையே மேற்கொள்ளும். அதேநேரத்தில் இந்த நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் விழுப்புரம் கோட்டத்துக்குள் அடங்கிய வல்லம், இனாம்காரியந்தல் உட்பட மூன்று சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இச்சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணம் நிர்ணயம் செய்து தற்போது, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 21ம் ேததி முதல் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சுங்கச்சாவடியை கடக்கும் வாகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கார், ஜீப், வேன் ஆகியவை ஒருமுறை கடந்து செல்ல ரூ35, ஒரே நாளில் இருமுறை கடந்து செல்ல ரூ50, வாடகை வாகனங்களுக்கு ஒருமுறை ரூ55, இருமுறை கடந்து செல்ல ரூ80, பஸ், லாரிகளுக்கு ரூ110, இருமுறை கடந்து செல்ல ரூ165 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், அதி கனரக வாகனங்களுக்கு ரூ120 முதல் 210 வரை ஒருமுறை கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

அதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களின் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் எடுப்பதால், சில மணி நேரம் கழித்த பிறகே அதற்கான `எஸ்எம்எஸ்’ வருகிறது. இந்த சுங்கச்சாவடியால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை இல்லாமல், தரமற்ற இருவழிச்சாலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Villupuram ,Mangalore National Highway ,Vallam , Villupuram-Mangalore National Highway Authority Vallam toll charging Rs 35 to Rs 215 for vehicles: Motorists demand cancellation
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு