போடி நகராட்சி 10வது வார்டில் மழைக்கு பல்லாங்குழியான சாலை பளபளப்பான தார்ச்சாலையானது: மக்கள் மகிழ்ச்சி

போடி: கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் புதிய தார்ச்சாலை மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த முன்னெடுப்பு பணிகள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் போடி அருேக கீழசொக்கநாதபுரம் விலக்கு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் சாலை பணிகளும் தீவிரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, போடியின் சுற்றுப்பகுதி கிராமங்களில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், சாலை சீரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி, போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் 33 வார்டுகளில் ஆய்வு செய்யப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில்  தொடர்ந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10வது வார்டு வ.உ.சி நகர் பிரதான சாலை மழையால் படுசேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று அப்பகுதி பிரதான சாலையில் 800 மீட்டர் அளவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக துவங்கி தற்போது முடிந்துள்ளது.

இப்பணிகளை போடி நகராட்சி கமிஷனர் (பொ) பொறியாளர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆட்சியில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்காததால் விபத்துகள் நடந்தவண்ணம் இருந்தது. மேலும், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். இந்நிலையில், 0வது வார்டு வ.உ.சி நகர் பிரதான சாலை மழையால் சேதமடைந்து பல்லாங்குழியானது. இதுகுறித்து நகர்மன்றத்தில் கோரிக்கை வைத்த சில நாட்களிலே புதிய தார்ச்சாலை பணிகள் துவங்கப்பட்டு, தற்போது பளபளக்கும் சாலையாக மாறி விட்டது. ’’ என்றனர்.

Related Stories: