×

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கவனிக்கப்படாத கைத்தறி தொழிலை மேம்படுத்த கைகொடுங்கள்: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் நெசவாளர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி:கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் கைத்தறி தொழிலுக்காக எந்தவொரு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. எனவே, அழிந்து வரும் கைத்தறி தொழிலை ேமம்படுத்த முறையான அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியில் நெசவுத்தொழில் பிரதான தொழிலாக செய்து வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைத்தறிகளும் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் கைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இங்கு 7 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொடுக்கப்படும் நூல்களை நெசவாளர்கள் சேலையாக உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொடுக்கப்படும் பாவுகளை பன்னேற்றம் செய்தும், நூல்களை கண்டு தயாரித்த பின்னர் சேலை உற்பத்தி செய்வார்கள். கைத்தறியில் தமிழக அரசின் பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீறுடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கீழ் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் சேலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் ஏதும் இல்லாத கைத்தறி வகைகளில், பழைய குழித்தறிகள் பெஞ்ச் தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த கைத்தறிகளில் ஒரு நாளைக்கு ஒரு சேலைகள் உற்பத்தி செய்ய முடியும். கூட்டுறவு சங்கங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சேலைக்கு 160 ரூபாய் வழங்கப்படுகிறது.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் சேலைக்கு வாரம் ஒரு முறை கூலி வழங்கப்படும். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் அந்தந்த மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகையை சங்கத்தில் வரவு வைக்கப்படும். இத்தொகை மூலம் நெசவாளர்களுக்கு கூலி தொடர் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் 200க்கும் குறைவான கைத்தறிகளே தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப புது ரகங்கள் ஏதும் கைத்தறியில் அறிமுகப்படுத்தவில்லை. மேலும், கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களும், மில் ரகங்களுடன் மார்க்கெட்டில் போட்டி போட முடியாமல் கைத்தறிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கைத்தறிகள் குறைந்து வருவதால் கூட்டுறவு சங்கங்களும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் கைத்தறியில் குறைவான சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், நெசவாளர்கள் பெடல் தறிக்கும், விசைத்தறிக்கும் மாறி வருகின்றனர். இதனால் கைத்தறி அழியும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது என நெசவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கூலி நிலுவை கிடைக்குமா?
பொங்கல் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தில் சேலைகள் உற்பத்தி செய்த நெசவாளர்களுக்கு கடந்த 6 மாதமாக 1 கோடி ரூபாய் கூலி நிலுவையில் இருந்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் கூலி நிலுவைத் தொகையில் முதற்கட்டமாக 50 லட்சம் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள கூலி நிலுவைத் தொகையை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2020 - 2021 ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் திட்டத்தில் பழைய 2 ஆண்டு கூலி தொகையான ரூ.1.85 கோடி தொகை நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையால் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் சூழல் ஏற்படும்.

உற்பத்தி நூல்கள் வழங்குங்கள்
சக்கம்பட்டி டி.சுப்புலாபுரம் பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல்  வேட்டி சேலை திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை உற்பத்தி செய்வதற்கு ஆண்டுதோறும்  ஜூன் அல்லது ஜூலை மாதத்தில்   உற்பத்திக்கான நூல்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படும். நூல்கள் வழங்கப்பட்ட பின்பு டிசம்பர் மாதத்திற்குள் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை நெசவாளர்களுக்கு நூல்கள் வழங்கப்படவில்லை. இதனால் உற்பத்தி காலங்கள் குறைந்து விடுகிறது. இந்தாண்டு உற்பத்திக்கான நூல்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், ‘‘கைத்தறி தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் தொழில் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  பெடல் தறியிலும் போதிய வருமானம் இல்லை. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆட்சியின் அலட்சியத்தால் நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பழைய கூலி நிலுவையில் உள்ளது. எனவே நெசவாளர்களுக்கு கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இந்தாண்டு உற்பத்திக்கான நூல்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே, கைத்தறி நெசவாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க தேவையான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இலவச பெடல்தறி வழங்கப்படுமா?
கைத்தறியால் போதிய வருமானம் ஈடுசெய்ய முடியாத காரணத்தால் நெசவாளர்கள் பெடல் தறியில் மாறி நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இந்த பெடல் தறியில் அரசின் பொங்கல் வேட்டி சேலைகளை கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்து வருகின்றனர். பெடல் தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலைக்கு 1க்கு 95 ரூபாய் கூலி தரப்படுகிறது. கைத்தறி அழிந்து வருவதால் அரசு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இலவச பெடல் தறிகள் வழங்கப்பட்டது. ஆனால் வேட்டி சேலைகள் உற்பத்தியில் பன்னேற்றம், கண்டு தயார் செய்தல், தறிபழுது பார்த்தல்  உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய முடியாததால் பெடல்தறி தொழிலும் நலிவடைந்து வருகிறது. எனவே, மீண்டும் இலவச பெடல்தறி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : AIADMK ,Sakkampatti ,D. Subpulapuram , Lend hand to develop handloom industry neglected in last 10 years of AIADMK rule: Sakkampatti, D. Subpulapuram weavers demand
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...