×

திருப்போரூர் - மானாம்பதி இடையே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சாலை; சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் - மானாம்பதி இடையே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தரவேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை 22 கிமீ தூரம் உள்ளது. இந்த சாலையை செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த சாலையில் ஆமூர், சிறுதாவூர், முந்திரித்தோப்பு, வேலங்காடு, பொருந்தவாக்கம், அகரம், மானாம்பதி, ஆண்டிக்குப்பம், ஆனந்தபுரம், எச்சூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக லாரிப்போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மானாம்பதியில் இருந்து திருப்போரூர் வரை உள்ள 10 கி.மீ. தூரம் உள்ள சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மானாம்பதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பலரும் சென்னை செல்வதற்காக மானாம்பதி வழியாக திருப்போரூர் வந்து அங்கிருந்து மாநகரப் பேருந்து மூலம் பயணிக்கின்றனர்.

இவர்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வரும்போது சாலையில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இந்த சாலைப்பள்ளங்களில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த சாலையில் திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் வரை வனப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் சாலையின் இரு மருங்கிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. திருப்போரூரில் பிரபல கந்தசுவாமி கோயிலும், திருக்கழுக் குன்றத்தில் வேதகிரீஸ்வர் மலைக்கோயில் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் செல்லும் பக்தர்கள் இந்த சாலையையே பயன்படுத்த வேண்டியது உள்ளது. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையின் ஒரு பகுதியான மானாம்பதி - திருப்போரூர் இடையே சேதமடைந்துள்ள இடத்தில் சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.  


Tags : Dangerous road causing accidents between Tiruporur - Manampathi; Emphasis on Alignment
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...