மாமல்லபுரம்: சர்வதேச 44வது சதுரங்க போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடந்தது. மேலும், இதில் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் காணொலி குறுந்தகடு வெளியிட்டு, பணியாற்றிய 1000 பேருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,‘முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21.4.2022 அன்று சட்டப்பேரவையில் சர்வதேச 44வது சதுரங்கப் போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 10.8.2022 வரை, உலகமே அதிசயிக்கம் வகையில், தமிழ்நாட்டில் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், இப்போட்டிக்கான தொடக்க விழா ஜூலை 28ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தொடக்க, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். சுமார், 186 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், பல்வேறு முன்னேற்பாடுகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் செய்யப்பட்டது. சிறப்பு, மருத்துவக் குழு மற்றும் நிலையான மருத்துவ குழுவினர், சதுரங்க போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்கியிருந்த விடுதிகளிலும், போட்டி நடைபெறும் அரங்கிலும் முகாம் அமைத்து மருத்துவ சேவை அளித்தனர். போட்டியில், பங்கேற்கும் வீரர்களுக்கு காப்பீட்டு மூலம் உள்நோயாளியாக ரூ.2 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வீரர்களும், வீரர்களின் நிர்வாக குழுவினருக்கு பிரத்யேக காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. ரூ.1 கோடியே 22 லட்சத்தையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தரப்பட்டுள்ளது.
சென்னை, பெருநகர மாநகராட்சி ‘நமக்கு நாமே’திட்டம் மூலம் ரூ.2 கோடியே 44 லட்சம் தந்து, இன்று மொத்தம் ரூ.3 கோடியே 66 லட்சம் எழும்பூர் மருத்துவமனையில் மிகப்பெரிய ஷட்டர் கட்டப்பட உள்ளது. இனிமேல், எழும்பூர் மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் யார் வந்தாலும் அவர்கள் குழந்தைகளை அனுமதித்து விட்டு அங்குள்ள தங்குமிடத்தில் பாதுகாப்பாக தங்கி செல்லலாம் என்ற உத்தரவாதம் இந்த விளையாட்டு போட்டி மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். இந்நிகழ்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் மரு.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.சம்சத் பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
