பள்ளிபாளையத்தில் பைனான்ஸ் அதிபரான கொமதேக நிர்வாகியை கடத்தி கொலை செய்து புதரில் சடலம் வீச்சு: கையாடல் செய்த ரூ.14 லட்சத்தை கேட்டதால் ஆத்திரம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, கடத்தப்பட்ட பைனான்ஸ் அதிபரான கொமதேக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். மாமனார் நிறுவனத்தில் ைகயாடல் செய்த ரூ.14 லட்சத்தை திருப்பிக் கேட்டதால், ஊழியர்களே அவரை கடத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொமதேக இளைஞரணி அமைப்பாளர் கவுதம் (35). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வெப்படையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

கடந்த 21ம் தேதி இரவு பைனான்ஸ் நிறுவனத்தை பூட்டி விட்டு, வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். பாதரை மாரியம்மன் கோயில் அருகே ஒரு கும்பல் அவரை வழிமறித்து காரில் கடத்திச்சென்றது. அடுத்த சில நிமிடங்களில், கவுதம் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு,  நகை, பணத்தை எடுத்து பையில் போட்டு வைக்கும்படியும், தான் அனுப்பும் நபரிடம் கொடுத்துப்பும்படியும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புகாரின்படி நாமக்கல் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில், 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வடுகபட்டி ரயில்வே தண்டவாளம் அருகே, மேட்டுக்காடு ஏரிக்கரை முட்புதர்களுக்குள் ஆண் சடலம் கிடப்பதாக வெப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு வாய்ஸ் மெசேஜ் வந்தது. போலீசார் உடனடியாக சென்று சடலத்தை மீட்டனர். விசாரணையில், அது கடத்தப்பட்ட பைனான்சியர் கவுதம் என்பதும், அவரது நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தி, பின்னந்தலையில் வெட்டியுள்ளனர். மேலும், உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கவுதமை கொலை செய்த 3 பேர், திருச்சியில் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்கள், கவுதம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன், பிரகாஷ் மற்றும் தீபன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மேலும் 5 பேருடன் சேர்ந்து, கவுதமை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். கவுதமின் மாமனார் குமார், நடத்தி வந்த நிதிநிறுவனத்தில் குணசேகரன் பணியாற்றியதும், அங்கு அவர் ரூ.14 லட்சம் கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பணத்தை தரும் வரை, தனது நிறுவனத்தில் பணிபுரியுமாறு கூறி, கவுதம் குணசேகரனை அழைத்து வந்துள்ளார். பணத்தை கேட்டு டார்ச்சர் செய்ததால் குணசேகரன்தான் திட்டமிட்டு சக ஊழியர்களுடன் சேர்ந்து அவரை கடத்தி கொன்றிருப்பது தெரியவந்துள்ளது.  திருச்சியில் பிடிபட்ட 3 பேரையும், போலீசார் நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கவுதம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், வெப்படையில் உள்ள மயானத்தில், உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெப்படையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. கொங்குநாடு  மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில்,  கட்சியின் இளைஞரணி பொறுப்பாளர் கவுதமை கடத்தி கொடூரமாக கொன்றவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: