பொன்னேரி: காட்டூர் - தத்தமஞ்சி நீர்தேக்க திட்ட பணியில் முறைகேடு நடந்துள்ளது என புகார் வந்ததால் ஆர்டிஒ அதிகாரி நேரில் ஆய்வு நடத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி ஆரணி ஆற்றின் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் மழைநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை தடுக்க காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து நீர் தேக்க திட்டம் 62 கோடியே 36 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் அதற்கான வேலைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றது.இந்நிலையில், ஏரியின் மதகு தடுப்புச் சுவர் அதன் உயரம் 4 அடி அளவுக்கு உயரமாக கட்டியுள்ளனர். இதனால், உபரி நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் மழை நீரும் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், வேலூர் அ. ரெட்டிபாளையம், அனுப்பம்பட்டு, தடபெரும்பாக்கம், மனோபுறம், ஏருப்பல்லிக்குப்பம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதனால், ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் மழை நீரில் மூழ்கி அழுகி விடுவதாகவும், வருகின்ற மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் ஆர்டிஓ காயத்திரியிடம் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரிடையாக ஏரியை ஆய்வு செய்ய பொன்னேரி ஆர்டிஓ காயத்ரி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் மதகுகள் கரைகளை நேற்றுமுன்தினம் மாலை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், நீர்தேக்க திட்ட பணியில் முறைகேடு நடந்ததாக புகார் செய்தனர். பின்னர் நீர்த்தேக்க திட்டத்திற்காக ஏரியை சரியாக தூர்வார வில்லை என அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாயிகள் ஏரியின் கரை கான்கிரீட் கலவை தடுப்பு கல்லை எடுத்துக் கொண்டு வந்து அதிகாரியின் முன்னிலையில் தரமற்ற நிலையில் இருப்பதாக உடைத்து காண்பித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆர்டிஓ காயத்திரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி ஏரியின் திட்டப் பணிகள் குறித்து, கேட்டறிந்து வரும் திங்கள்கிழமைக்குள்ளாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் 10 கிராம விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
