×

சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலே செய்வோம் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம்: கோபியில் கலைஞர் சிலை திறந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோபி: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என கோபியில் கலைஞர் சிலைைய திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோபிச்செட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் கலைஞரின் முழுஉருவ வெண்கல சிலை 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, சிலையை திறந்துவைத்து பேசியதாவது:
ஈரோட்டில், மூன்று சிலைகள்  இல்லை, 300 சிலைகள் கலைஞருக்கு வைக்கலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு ஈரோடு  அவருடன் பின்னி பிணைந்துள்ளது. அந்த  காலத்தில், கலைஞர், ஊர் ஊராக சென்று நாடகங்கள் நடத்தி வந்தார்.  பாண்டிச்சேரியில் தனது சாந்தா பழனிசாமி என்ற நாடகத்தை அரங்கேற்ற  முயற்சி எடுத்தார். இதில், அவர் சிவகுரு வேடம் ஏற்றார். இந்த நாடகத்தை  பார்க்க பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் வந்தனர்.  அப்போது, ஏற்பட்ட கலவரம் காரணமாக நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது.  கலவரக்காரர்களிடம் இருந்து பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி என  அனைவரையும் தலைவர் கலைஞர் காப்பாற்றினார். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தார்.

இதன்பிறகு,  கலைஞர், பாரதிதாசன், காஞ்சி கல்யாணசுந்தரம்  ஆகியோர் புதுவை வீதியில் நடந்து வந்தபோது, கலவரக்காரர்கள்  மூன்று பேரையும் கண்மூடித்தனமாக தாக்கினர். பலமாக அடித்து, சாக்கடையில்  வீசிவிட்டு சென்றனர். அந்த காட்சியை பார்த்த அப்பகுதியை சேர்ந்த  பொதுமக்கள், அவர்கள் இறந்துவிட்டதாக முடிவு செய்தனர். மறுநாள் காலையில்  பெரியாருக்கு செய்தி கிடைத்தது. அவர், சாக்கடையில் பலத்த காயங்களுடன்  கிடந்த கலைஞரை தன் மடி மீது படுக்கவைத்து அவருக்கு ஏற்பட்ட  காயங்களுக்கு மருந்து போட்டார். பின்னர், இங்கு இருக்க வேண்டாம்  எனக்கூறி, ஈரோட்டிற்கு அழைத்து வந்து, தங்கவைத்தார்.

மேலும், குடியரசு என்ற  வார இதழில் துணை ஆசிரியராக பொறுப்பை ஒப்படைத்தார். அங்கு, கலைஞர்  பணியாற்றி வந்தபோதுதான் திராவிட கழகம் உதயமானது. அந்த இயக்கத்துக்கு கொடி  எப்படி தேர்வு செய்வது? என அனைவரும் யோசித்தனர்.  கருப்பு நிற  கொடியில், நடுவில் ஒரு சிவப்பு வட்டம் வரைந்து கொடியை உருவாக்கலாம் என  யோசனை தெரிவித்தனர். ஒரு வெள்ளை தாளில் கருப்பு மையை பூசினார்கள். ஆனால்,  நடுவில் பூச சிவப்பு மை கிடைக்கவில்லை. அப்போது, தலைவர் கலைஞர், டேபிளில்  இருந்த குண்டூசியை எடுத்து தனது விரல் நுனியில் குத்தி, அதிலிருந்து வந்த  ரத்தத்தின் மூலமாக, சிவப்பு வண்ணத்தை வட்டமாக பூசினார். கலைஞரின்  ரத்தத்தால் உருவாக்கப்பட்டதுதான் திராவிட கழகத்தின் கொடி என்பது வரலாற்றில்  பதிவாகியுள்ளது. அதுதான் இன்றும் திராவிடர் கழக கொடியாக உள்ளது.

கலைஞருக்கு  முதன் முதலில் சிலை வைக்க முடிவு எடுத்தவர் தந்தை பெரியார். இதற்காக,  அறிஞர் அண்ணாவிடம் அனுமதி பெற்று, சிலை வைக்க முயற்சி செய்தார். ஆனால்,  அதற்குள் அறிஞர் அண்ணா உடல் நலிவுற்று மறைந்துவிட்டார். பின்னர், தந்தை  பெரியார், எப்படியும் சென்னை மவுண்ட்ரோட்டில் கலைஞருக்கு சிலை வைத்துவிட  வேண்டும் என நினைத்தார். இதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தந்தை பெரியார்  தலைமை பொறுப்பேற்றார். தொடர்ந்து பணி  நடந்தபோது பெரியார் மறைந்துவிட்டார். பின்னர், மணியம்மையார் சிலை  வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சென்னை அண்ணா சாலையில் மையப்பகுதியில்  கலைஞருக்கு சிலை வைத்தார். ஆனால், அந்த சிலை என்ன ஆனது என  உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதை நான், இங்கு கூற விரும்பவில்லை.

1971ல் சேலத்தில் தந்தை பெரியாருக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கும் விழா நடந்தது. விழா மேடையில் இருந்த பெரியார், கலைஞரை அருகில் அழைத்து, அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளி சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தார். இது, என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத, பெருமைப்படக்கூடிய நிகழ்ச்சி என கலைஞர் சொன்னார்.  அதேபோல், இங்கு கலைஞர் சிலையை திறந்துவைத்துள்ள நான் சொல்கிறேன். இது, என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. பெரியாரின் குருகுலத்தில் பயின்ற, தலைவர் கலைஞர் வாழ்ந்த இந்த மண்ணில் அவரது சிலையை திறந்து வைத்தது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். கலைஞர் சிலையை பார்க்கும்போது உணர்ச்சி பெருக்கிடுகிறது, உத்வேகம் பிறக்கிறது, உற்சாகம் ஏற்படுகிறது, மகிழ்ச்சி பொங்குகிறது, பெரிதும் பூரிப்படைகிறேன். அவரைப்போல் என்னால் பேச முடியாது. அவரைப்போல் என்னால் எழுத முடியாது. அவரைப்போல் என்னால் உழைக்க முடியாது. ஆனால், அவர் ஏற்றுக்கொண்ட அனைத்து காரியத்தையும் முடிக்கவேண்டும் என நான் உறுதி எடுத்துள்ளேன்.

அதனால்தான் தற்போது, தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறோம். தமிழகத்தில் இப்போது உருவாகிற கட்சிகள், கட்சி துவங்கிய உடனேயே, அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம், அடுத்த முதல்வர் நாங்கள்தான் என்கிறார்கள். ஆனால், 1949-ல் துவக்கப்பட்ட திமுக, முதன்முதலில் தேர்தல் களத்துக்கு வந்த ஆண்டு 1957. இந்த தேர்தல் களத்தில் இறங்கலாமா? என அண்ணா திருச்சியில் மாநாட்டை கூட்டி, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார். அதன்பிறகே, தேர்தல் களத்தில் குதித்தோம். அப்போது நாம் வென்ற இடங்கள் 15. அதன்பிறகு, 1962-ல் நடந்த தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தோம்.

1967-ல் நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம், அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம். ஓராண்டு காலம்தான் அண்ணா முதல்வர் பொறுப்பில் இருந்தார். பிறகு, புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். அதன்பிறகு,  தலைவர் கலைஞர் அந்த பொறுப்பை ஏற்று நடத்தினார். 1971-ல் நடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கலைஞர் தேடித்தந்தார். 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்த கலைஞர், எத்தனையோ திடங்களை உருவாக்கி தந்துள்ளார். அறிஞர் அண்ணா ஓராண்டு காலத்தில் தமிழகக்துக்கு எண்ணற்ற திட்டங்களை தந்தார். கலைஞர், தனது 95 வயதில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து சுற்றி, சுழன்று எத்தனையோ திட்டங்களை தந்தார்.

கலைஞர் வழியில், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது நாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்றார் கலைஞர். நான் சொல்கிறேன் - சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலேயே செய்வோம். இது என்னுடைய பாணி. எண்ணற்ற திமுக தொண்டர்கள் சிந்திய ரத்தத்தால், வியர்வையால், உங்களால், நான் இந்த பொறுப்பில் அமர்ந்துள்ளேன். உங்கள் உத்தரவை ஏற்று, கலைஞரின் பணியை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வெள்ளி செங்கோல் பரிசு
சிலை திறப்பு விழா முடிவில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நல்லசிவம், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசு வழங்கினர்.

கொட்டும் மழையில் வரவேற்பு
கோபி கள்ளிப்பட்டி பகுதியில் சிலை திறப்பு விழா இடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபோது மழை கொட்டியது. முதல்வர் பேச துவங்கியபோது இன்னும் கூடுதலாக மழை பெய்தது. ஆனாலும், அங்கு திரண்டிருந்த மக்கள், கலைந்து செல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Gobi , We will do what is not said, we will do without saying, Dravida model rule in Tamil Nadu, Chief Minister M.K.Stal's speech
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...