×

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு ஓபிஎஸ்சுடன் இணைந்து ெசயல்பட முடியாது உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்: தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும்,  கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும், தலைமை அலுவலகம் அல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.

எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடும்போது, ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளது ஏற்க முடியாதது,  தவறானது. ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கவில்லை. மனுவில் கோரிக்கை வைக்கப்படாத நிவாரணம் வழங்கியதை ஏற்க முடியாது. கட்சி விதிகளின்படிதான் பொதுக்குழு நடைபெற்றது. அதற்கான நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்று எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் கூறவில்லை என்று வாதிட்டார்.

அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடும்போது, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் கட்சி  செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வர மாட்டார்கள் என்பதால் கட்சியின் நடவடிக்கைகள் முடங்கிவிடும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும் வகையில் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதை ஏற்க முடியாது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, மதியம் 2.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வாதிடும்போது, ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் இரு பதவிகளும் காலியாகவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள தனி நீதிபதி இரு பதவிகளும் நீடிப்பதாக கருதும் வகையில் ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாதது. இதை தனி நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் மட்டுமே பதவிகள் காலியானதாக கூறலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்று கட்சி விதிகளில் கூறப்படவில்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக இல்லை என்பதன் அடிப்படையிலேயே ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இதே நீதிமன்றம் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில் அவைத்தலைவர் தேர்வு, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கான அறிவிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் விதிகள் மீறப்பட்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில்  வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபிறகு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைரமுத்து ஆகியோர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : AIADMK General Assembly ,OPS ,EPS , AIADMK General Assembly invalid, cannot work with OPS, EPS side argues in High Court
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்