×

வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.!

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர்  ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,  தலைமையில் இன்று  நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.08.2022) ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகளில் கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற பிற துறை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வ அடிப்படையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள்   இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும், வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்பொழுது அவரின் கைபேசியில் உள்ள Garuda App மூலமாவும் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) திரு.ஜி.குலாம் ஜீலானி பாபா, மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Gagandeep Singh Bedi , Voter ID Card, Aadhaar Number, Consultation Meeting, Gagandeep Singh Bedi
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...