×

கையாடல் செய்த பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்; கொமதேக நிர்வாகி கடத்தி கொலை: கூட்டாளிகளுடன் ஊழியர் வெறிச்செயல்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே காரில் கடத்தப்பட்ட கொமதேக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இவர் நடத்தி வந்த பைனான்சில் ஊழியர் கையாடல் செய்த 15 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொமதேக இளைஞரணி அமைப்பாளர் கௌதம் (35). இவர் பாதரை கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர், வெப்படையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 21ம் தேதி இரவு பைனான்ஸ் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு பைக்கில் கௌதம் புறப்பட்டார்.

பாதரை மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் காரில் தூக்கி போட்டு கடத்திச்சென்றது. கடத்தப்பட்ட சில நிமிடங்களில் கௌதம் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டில் உள்ள நகை-பணத்தை எடுத்து பையில் போட்டு வைக்கும்படியும், தான் அனுப்பும் நபரிடம் கொடுத்து அனுப்பும்படியும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், நாமக்கல் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டு 200 போலீசார் தேடி வந்தனர். ஆனால் கௌதம் கடத்தப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி வடுகபட்டி ரயில் தண்டவாளம் அருகே மேட்டுக்காடு ஏரிக்கரையின் அடர்ந்த முட்புதர்களுக்குள் ஆண் சடலம் கிடப்பதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். விசாரணையில் அவர், கடத்தப்பட்ட பைனான்சியர் கௌதம் என்பது தெரியவந்தது.

அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டது. நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தி, பின் தலை யில் வெட்டியுள்ளனர். மேலும், உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியதில் கௌதம் உயிரிழந்துள்ளார். சடலத்தை ஏரிக்கரையோரம் அடர்ந்த புதருக்குள் வீசிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கெளதமின் பைனான்சில் வெப்படையை சேர்ந்த தீபன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் பைனான்சில் பலருக்கும் சிபாரிசு செய்து பணம் வாங்கி கொடுத்துள்ளார். பைனான்ஸ் பணத்தில் தீபன் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளதை, கெளதம் கண்டுபிடித்துள்ளார். இந்த பணத்தை திரும்ப கட்டுமாறு கெளதம், தீபனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபன், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கௌதமை கடத்தி சென்று படுகொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தீபன் மற்றும் சிலர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Komadeka , Anger at being asked to return the money he had handled; Komadeka executive abducted and killed: employee frenzy with accomplices
× RELATED பாஜவுடன் கூட்டணி இல்லையென்று...