×

வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த விவகாரம்; குற்றவாளிகள் 5 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்: மீதமுள்ள ரூ.13 லட்சம் பணம் குறித்து தீவிர விசாரணை

சென்னை: வடபழனி நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ.30 லட்சம் பணம் கொள்ளையடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 5 பேரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து மீதமுள்ள ரூ.13 லட்சம் பணம் எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனி மன்னார் முதலி 1வது தெருவை சேர்ந்தவர் சரவணன்(44). இவர் தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கடந்த 8 மாதங்களாக ‘ஓசானிக் கேபிடல்’ என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 17ம் தேதி முகமூடி அணிந்த வந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கு பணியில் இருந்த தீபக் மற்றும் நவீன்குமாரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தை அள்ளி சென்றனர்.

இந்த வழக்கில் பிடிபட்ட கல்லூரி மாணவன் ரியாஷ் பாஷா(22) அளித்த தகவலில் முக்கிய குற்றவாளியான கோயம்பேடு பகுதியில் வேலை செய்து வரும் முக்கிய குற்றவாளி மொட்டை(எ) கண்ணன்(28) இஸ்மாயில் (21) ஜானி(22), பரத்(23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  கிஷோர் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் கடந்த 18ம் தேதி திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த கிஷோர் மற்றும் தமிழ்செல்வம் ஆகியோர் தனது நண்பர்களிடம் கொடுத்து வைத்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராணிப்பேட்டையில் கைது செய்யப்பட்ட ஜானி, தினேஷ் மற்றும் மொட்டை(எ)கண்ணன் ஆகியோரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம், இஸ்மாயில் மற்றம் பரத் ஆகியோரிடம் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் இந்த வழக்கில் ரூ.17 லட்சம் பணம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.13 லட்சம் பணம் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இதையடுத்து வடபழனி போலீசார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மொட்டை(எ)கண்ணன், இஸ்மாயில், பரத், ஜானி, தினேஷ் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து போலீசார் 5 குற்றவாளிகளையும் காவலில் எடுத்து மீதமுள்ள ரூ.13 லட்சம் பணம் குறித்தும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Vadapalani Finance Company , Vadapalani Finance Company robbery case of Rs.30 lakh; 3-day police custody for 5 accused: intensive investigation into remaining Rs 13 lakh
× RELATED வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம்...