×

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுங்கச்சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான ராஞ்சியை சேர்ந்த தொழிலதிபர் பிரேம் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 11 இடங்களில் ஒன்றிய அமலாக்க துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள், முக்கிய ஆவணங்களை தேடி சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 2 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டக்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடந்தது. அந்த துப்பாக்கிகள் ராஞ்சியை சேர்ந்த 2 போலீசாருக்கு பாதுகாப்பு பணியின் போது வழங்கப்பட்டது என ஆர்கோரா காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார் தெரிவித்தார். கடந்த 23ம் தேதி சம்பந்தப்பட்ட அந்த காவலர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, ​​​​பிரேம் பிரகாஷின் வீட்டில் ஊழியராக இருந்த தங்களுக்கு தெரிந்தவரை சந்தித்துள்ளனர்.

அப்போது மழை பெய்ததால் தங்களிடம் இருந்து துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் அங்கிருந்த ஒரு பீரோவிற்குள் வைத்து பூட்டி விட்டு சாவியை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். மறுநாள் துப்பாக்கிகளை எடுக்க சென்றபோது அந்த வீட்டில் சோதனை நடைபெற்றதை கண்ட அந்த காவலர்கள் அவற்றை எடுக்காமல் திரும்பியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ராஞ்சி போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jharkhand CM , AK 47 rifles seized from Jharkhand CM's aide's house: 2 cops suspended
× RELATED பழங்குடியினரின் உரிமைகள்...